நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிஎம்டிஏ-வின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 23) உத்தரவிட்டுள்ளது.
சென்னை நெசப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக, லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரர் விஸ்வானந்தன் ஆகியோருக்கு சொந்தமான 17 சென்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1983-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. madras high court sentences ias officer
ஆனால், அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படாததால், பயன்படுத்தப்படாமல் உள்ள தங்கள் நிலத்தை திரும்ப தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2003-ஆம் ஆண்டு லலிதாம்பாள், விஸ்வானந்தன் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர்களுடைய கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, மனுதாரர்களிடம் 10.5 சென்ட் நிலம் திருப்பி அளிக்கப்பட்டது. ஆனால், சாலை விரிவாக்கத்திற்காக 6.5 சென்ட் நிலம் தேவைப்படுவதாக கூறி, வீட்டு வசதி வாரியம் தன் வசம் வைத்துக்கொண்டது. madras high court sentences ias officer
இந்த நிலமும் உரிய காலத்தில் பயன்படுத்தப்படாததால், அந்த நிலத்தையும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து இரண்டு மாதங்களில் இந்த பிரச்சனைக்கு சட்டப்படி தீர்வு காண வேண்டும் என்று அப்போதைய சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், இந்த உத்தரவை அன்சுல் மிஸ்ரா பின்பற்றவில்லை என்று அவருக்கு எதிராக 2024-ஆம் ஆண்டு மனுதாரர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகனுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, “2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 28-ஆம் தேதி அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்பட்டது” என்று அன்சுல் மிஸ்ரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. madras high court sentences ias officer
இதனை ஏற்க மறுத்த நீதிபதி வேல்முருகன், “இரண்டு மாதத்திற்குள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். எனவே, அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் இருவருக்கும் ரூ.25,000 இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இந்த தொகையை அன்சுல் மிஸ்ராவின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். மூன்று வாரங்களில் இழப்பீடு வழங்கவில்லை என்றால், மேலும் 10 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. குறித்த காலத்திற்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். madras high court sentences ias officer