பீகார் மாநிலத்தில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த அருண்ராஜ் விருப்ப ஓய்வு பெறுவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து நடிகர் விஜய்யின் தவெகவில் இணையும் அருண்ராஜ், அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படக் கூடும் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள். Income Tax Officer Arunraj
தமிழ்நாட்டைச் சேர்ந்த அருண்ராஜ், மருத்துவராகப் பணிபுரிந்த நிலையில் யுபிஎஸ்சி தேர்வு மூலமாக IRS அதிகாரியானார். தமிழ்நாட்டில் வருமான வரித்துறை இணை ஆணையராகப் பதவி வகித்த அருண்ராஜ், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
பீகாரில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்த அருண்ராஜ், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். மத்திய அரசுப் பணி அதிகாரி என்பதால் இவரது விருப்ப ஓய்வுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனையடுத்து தமிழ்நாடு திரும்பும் அருண்ராஜ், தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் அருண்ராஜ், அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்படக் கூடும் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
மேலும் பாஜக ‘தலைகளுடன்’ நெருங்கிய தொடர்பில் இருக்கும் அருண்ராஜ், 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.