சித்திரகுப்தனாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி – மு.வீரபாண்டியன்

Published On:

| By Pandeeswari Gurusamy

ADMK

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அல்ல, தமிழ்நாட்டின் சித்திரகுப்தனாக மாறிவிட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.நேற்று சென்னை கொளத்தூரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் குறித்து “கொரோனாவிலேயே போயிருப்பார்” என்று பேசியது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 9) வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் ஒன்றிய அரசுதான். தமிழக அரசும் மாநில முதல்வரும் காரணம் என்று விஜய் பேசுவது பிழை. உலக அளவில் இந்த நெருக்கடிக்குக் காரணம் அமெரிக்க அதிபர். போர் வெறி பிடித்த அமெரிக்க அதிபரும் இஸ்ரேலும் தான் காரணம். யுத்தங்களைத் தடுக்காமல், ஒரு நாட்டின் அதிபரைக் கொன்றபோதும் கண்டிக்காமல், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை எடுத்து ‘போரை நிறுத்துங்கள்’ என்று கூட வாய் திறக்கவில்லை இந்திய பிரதமர். இவர்கள்தான் உண்மையான காரணம். தமிழக முதல்வரோ தமிழ்நாடு அரசோ காரணம் அல்ல.”என்றார்.

மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வசைபாடுகிறார். அவர் இப்போது தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக அல்ல, ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவர் போல் அவர் பேசவில்லை. தமிழ்நாட்டின் சித்திரகுப்தனாக அவர் மாறிவிட்டார். ‘இவர் இதை குடித்து சாக வேண்டும், அவர் மேலே போக வேண்டும், கீழே போக வேண்டும்’ என்று பேசிக் கொண்டிருக்கிறார்.இது தமிழ் மரபுக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்றது அல்ல. அவரிடம் அரசியலை எதிர்பார்க்கிறோம். அவரிடம் அரசியல் வறட்சி இருக்கிறது. அது தமிழகத்திற்கு நன்மை பயக்காது. இந்த அரசின் பிழைகளைச் சுட்டிக்காட்டுங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share