பொதுசிவில் சட்டம் குறித்த பழனிசாமியின் நிலைப்பாடு என்ன? – ஸ்டாலின் கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

Stalin

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 12) பரமக்குடியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களான
முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ராஜகண்ணப்பன், இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதியில் கே.கே. கதிரவன், திருவாடானை தொகுதியில் இராம. கருமாணிக்கம் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். திமுகவின் நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கி பேசினார்.

ADVERTISEMENT

மேலும் பேசிய முதல்வர், “நான் கேட்கும் ஒரே கேள்வி. இப்படி என்றைக்காவது ஒருநாள் பழனிசாமி பேசியிருக்கிறாரா? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மறைந்த தலைவர்களை – நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது; அடுத்தவர்களின் மரணத்தை எதிர்பார்த்துப் பேசுவது; பெண்களைக் கண்ணியமில்லாமல் பேசுவது என்று தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். வாய்க் கொழுப்பு எடுத்து சாக்கடைக்கு சரிசமமாக வந்து விழும் அவருடைய வார்த்தைகளுக்கு பாடம் புகட்டப் போகும் நாள்தான், ஏப்ரல் 23. மறந்துவிடாதீர்கள்.

கொள்கையற்ற அடிமைக் கூட்டத்தை, சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகு வைக்க ஒன்று சேர்ந்திருக்கும் துரோகக் கூட்டத்தை, மக்கள் விரட்டியடிக்க வேண்டும். சாதனைகளால் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கும் திராவிட மாடல் அரசை மீண்டும் ஆட்சியில் நீங்கள் அமர்த்த வேண்டும். ஏனெனில், திராவிட மாடலின் திட்டங்கள் என்பது வரலாற்றில் நிற்கும் திட்டங்கள் மட்டுமல்ல; புது வரலாற்றையே படைக்கும் திட்டங்கள்! வெறும் புள்ளி விவரங்களில் அல்ல; கோடிக்கணக்கான தமிழ் மக்களின் புன்னகையால் எழுதப்பட்டிருக்கும் சாதனை சரித்திரம்தான் திராவிட மாடல்!

ADVERTISEMENT

நம்முடைய சூப்பர்ஸ்டாரில் ஏராளமான வாக்குறுதிகள் இருக்கிறது. இந்த ஸ்டாலின் சொன்னால், சொன்னதைச் செய்வான்! நான் கலைஞரின் மகன்! சொன்னதை உறுதியாகச் செய்வேன்! சொல்லாமல் அதிரடியாகவும் செய்வேன்!

அதனால்தான், “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று இருந்த நிலையை மாற்றி, “தெற்குதான் வழிகாட்டுகிறது” என்ற நிலையை திராவிட மாடலில் உருவாக்கி இருக்கிறோம்.

ADVERTISEMENT

அப்படி வழிகாட்டும் தெற்கை, வஞ்சிக்கும் செயலில்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியிருக்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறோம் என்பதை காரணமாக காட்டி, ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கப் பார்க்கிறார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு துணைநின்ற தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை தண்டிக்கப் பார்க்கிறார்கள். இதை, இந்தியாவில் இருக்கும் அத்தனை ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்கப் போகிறோம். இந்த அநியாயத்தை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் பழனிசாமிக்கு இருக்கிறதா? மற்றவற்றுக்கெல்லாம் வாய்கிழியப் பேசும் பழனிசாமி, பா.ஜ.க-வின் அட்டூழியங்களை எதிர்த்து கேள்வி கேட்க சொன்னால் மட்டும், “சைலண்ட் மோடுக்கு” போய் விடுகிறார். மோடியையும் – அமித்ஷாவையும் எதிர்த்து பேச வேண்டுமென்றால் பயத்திலேயே “ஸ்விட்ச் ஆஃப்” ஆகிவிடுவார்.

அவர் எதற்காக பிரச்சாரத்திற்கு போகிறார் தெரியுமா? இப்படிப்பட்ட ஒரு அடிமை, உலகத்தில் யாருமே பார்த்ததில்லை என்ற கின்னஸ் சாதனையைப் படைக்கத்தான் பிரச்சாரம் செய்கிறார்! இவரின் ஓனர் யாரு? பா.ஜ.க.!

இங்கு மீனவச் சொந்தங்கள் வந்திருப்பீர்கள்… உக்ரைன் போரை நிறுத்திவிட்டேன், அமெரிக்காவையே அலற விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் விஸ்வகுரு மோடி அவர்கள், அண்டை நாடான இலங்கையிடம் பேசச் சொன்னால், மவுனகுருவாக ஆகிடுவிடுவார்! பார்க்கிறோமா, இல்லையா? தட்டிக் கேட்க முடியவில்லை என்று சொல்வதைவிட, தமிழ்நாட்டு மீனவர்கள்தானே என்பதால், தட்டிக் கேட்காமல் இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நம்முடைய தமிழ்நாட்டு மீனவர்களை, இந்திய மீனவர்களாக நினைத்திருந்தால், இப்படி அல்லல்பட விட்டிருப்பாரா? கச்சத்தீவு மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத் தீர்மானம் உட்பட எத்தனை கோரிக்கைகளை அனுப்பி வைத்திருப்போம். இதுவரை ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன? எதுவும் இல்லை. இதுதான் நாம் கேட்கும் கேள்வி!

பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டின் மீது வரும் திடீர் அக்கறை என்பது, வெறும் அரசியல் ஸ்டண்ட் மட்டும்தான்! அவர்கள் செய்வது ராஜதந்திரம் இல்லை; இரட்டை வேட தந்திரம்!

அண்மையில், சென்னையில் ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள், “ஜீரோ B.J.P” என்ற இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். அதைத் தொடங்கி வைத்தவர் யார் தெரியுமா? “பரகால பிராபகர்”! ஒன்றிய நிதியமைச்சராக இருக்கிறார்களே, நிர்மலா சீதாராமன், அவரின் கணவர்தான், இந்த “பரகால பிரபாகர்” அவர்கள். அவர் என்ன சொல்கிறார் என்றால், “தமிழ்நாட்டுத் தேர்தல், நாட்டுக்கே முக்கியமான தேர்தல்!” “பா.ஜ.க.வுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் – இந்திய அரசியலமைப்புச் சட்டம் போற்றிப் பாதுகாக்கும் உயர்ந்த விழுமியங்கள் மீது விழும் மரண அடி!” அதுமட்டுமல்ல, “மத நல்லிணக்கம் – மொழி நல்லிணக்கம் – மாநிலங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு விழும் மரண அடி!” “சமத்துவம் – சகோதரத்துவம் – சமூகநீதி – சுதந்திரம் – பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றின் மீது விழும் மரண அடி!” என்று எச்சரித்திருக்கிறார். நாம் என்ன மொழி பேச வேண்டும் – நாம் என்ன படிக்க வேண்டும் – நாம் என்ன உடுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் பா.ஜ.க.வை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று, பரகால பிரபாகர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். பா.ஜ.க. எவ்வளவு பெரிய டேமேஜை – டேஞ்சரை உண்டாக்கியிருந்தால், அவர் இப்படி பேசியிருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்.

அண்மையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கும் பா.ஜ.க., பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். நம்முடைய பன்முகத்தன்மைக்கு பா.ஜ.க. விட்டிருக்கும் நேரடி சவால் இது! மேற்கு வங்கத்தில் இருந்து விட்டிருக்கும் அந்தச் சவாலை, அவர்களால் தமிழ்நாட்டில் விடமுடியவில்லை! ஏன் என்றால், தமிழ்நாட்டை பாதுகாத்துக் கொண்டு இருப்பது “திராவிடப் பெருஞ்சுவர்!” தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் கட்டிக் காத்த இந்தத் தமிழ்க் கோட்டையை – சமத்துவத்துக்கு எதிரான மதவாத கும்பல்கள் ஆக்கிரமிக்க ஒருநாளும் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்! இதை, பா.ஜ.க.வும் நன்றாக உணர்ந்திருக்கிறது!

அதனால்தான், “நம்முடைய கையையே எடுத்து, நம்முடைய கண்ணைக் குத்தும் வேலையைச்” செய்ய இன்றைக்கு அவர்கள் அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்! பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டிற்குள் அழைத்துக் கொண்டு வருவதற்கான, பல்லக்குத் தூக்கியாக மாறியிருப்பவர்தான் பழனிசாமி!

தமிழ்நாட்டுக்கு வரிசை கட்டி வரும் பா.ஜ.க. அமைச்சர்களும் – நட்சத்திரப் பேச்சாளர்களும் தொடர்ந்து என்ன பேசுகிறார்கள்? தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்கள்! இதை ஒரு நாளாவது கண்டித்திருக்கிறாரா பழனிசாமி?

மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்தாக, தொகுதி மறுசீரமைப்புத் திட்டம் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதை கண்டித்து, தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒரு வார்த்தையாவது பழனிசாமி பேசியிருக்கிறாரா?

பொதுசிவில் சட்டம் குறித்து பழனிசாமியின் நிலைப்பாடு என்ன?

மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து, பெரிய அட்டார்னி ஜெனரல் போன்று லா பாயிண்ட் எல்லாம் பேசிக் கொண்டு இருந்தாரே… பொதுசிவில் சட்டம் பற்றி, கருத்து சொல்வாரா?

பழனிசாமி அவர்களே… காலில் விழுந்து விழுந்து கால்களை வாரிவிட்ட நீங்கள், இப்போது சொந்த மக்களுக்கே குழி பறித்து துரோகம் செய்கிறீர்கள்! இதுதான் பழனிசாமி செய்யும் பச்சை துரோகம்!

பழனிசாமி தமிழ்நாட்டை ஆட்சி செய்த நான்கு ஆண்டுகள் என்பது, ஊழல்களும் – மக்கள் விரோத நடவடிக்கைகளும் நிறைந்த, இருண்ட ஆட்சிக் காலம்! சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அவரின் ஆட்சியின் அடையாளங்கள் என்ன?

பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி! துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி! கொடூரமான ஆட்சிக்கு கொடநாடே சாட்சி! கேடுகெட்ட ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி! என்று அனைத்துமே நெகட்டிவாகத்தான் இருக்கிறது!

தவறுக்கு மேல் தவறுகள் செய்த பழனிசாமி – தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க – சரண்டரான இடம்தான், பா.ஜ.க.வின் வாஷிங்மெஷின்! தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க, அவர் கொடுத்த விலைதான், தமிழ்நாட்டின் உரிமைகள்! அ.தி.மு.க.வுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் – பா.ஜ.க.வுக்கு விழும் வாக்குகள்! தனிமனிதர்களைவிட நமக்கு தமிழ்நாடுதான் பெரியது!

எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பா.ஜ.க. எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்! அதனால்தான், நடக்கும் தேர்தல் – தமிழ்நாடு வெர்சஸ் NDA என்று அழுத்தமாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியைக் கொடுத்து, விரட்ட வேண்டும்! டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு இருக்கும், டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு அடிமைகள் தமிழ்நாட்டில் ஆளக் கூடாது!

நேற்று, ஐ.பி.எல் மேட்ச் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் வேனில் வரும்போது ஐ–பேடில் மேட்ச் பார்த்தேன். டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது! அதேபோன்று, இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போவது யாரு? தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?என கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த தொண்டர்கள் தமிழ்நாடு அணி என குரல் எழுப்பினர்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்… நாம் போராடுவது, தி.மு.க.வின் வெற்றிக்கு மட்டுமல்ல; கூட்டணியின் வெற்றிக்காகவோ மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக!” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share