தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 10) மாலை தஞ்சையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திமுக அரசின் சாதனைகளை, நலத்திட்டங்களையும் விவரித்து பேசிய முதல்வர் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கினார்.
மேலும் அதிமுக பழனிசாமி குறித்து பேசுகையில், “பழனிசாமியின் ஓனராக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகையால், நெல் உற்பத்தி நிறைய பெருகி வருகிறதாம். அப்படி பெருகும் காரணத்தால், பல்வேறு பிரச்சினைகள் உருவாகிறதாம். அதனால், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கிக் கொண்டு இருக்கும் ஊக்கத் தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாம்.” என்ன கொடுமை பாருங்கள்…
மொத்தத்தில், “நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கூடாது” என அறிவுறுத்தி ஒன்றிய அரசு நமக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அதுவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என மூச்சுக்கு மூச்சு சொல்லிக் கொள்ளும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களின் நிதியமைச்சகம்தான் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது.

உண்மையிலேயே தமிழர் என்ற உணர்வு இருந்தால் இதற்காவது, பழனிசாமி அவர்கள் வாய் திறந்து அவர்களின் ஓனரான பா.ஜ.க.வை கண்டிப்பாரா? வெட்கம், மானம், சூடு, சொரனை இருந்தால் பா.ஜ.க.வை. கண்டிக்க எடப்பாடி தயாரா? இல்லை… அசிங்கமாக, வழக்கம்போல, அவதூறு பேச மட்டும்தான் அவர் வாய் திறப்பாரா? விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது?
இன்னொரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் நான் நினைவுபடுத்துகிறேன்.
நான்காண்டு காலம் முதலமைச்சராக இருந்த ‘போலி விவசாயி’ பழனிசாமி ஆட்சியில், தமிழ்நாட்டுக்கு உணவளிக்கும் வேளாண் பெருமக்களுக்கு மாநில அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத் தொகையை ‘ஒரு ரூபாய்’கூட அவர் உயர்த்தித் தரவில்லை. பச்சைத் துண்டை போட்டுக் கொண்டு, பழனிசாமி விவசாயிகளுக்கு செய்ததெல்லாம் பச்சைத் துரோகம்தான்! “என்றார்.

மேலும் பேசிய அவர், “டெல்லியின் காலடியில் தமிழ்நாட்டை அடகு வைப்பது பழனிசாமியின் விருப்பம்! ஆனால், தமிழ்நாட்டின் மாநில உரிமைகளையும் – சுயமரியாதையையும் டெல்லியிடம் சரண் அடையாமல் பாதுகாத்து, அதற்கு தடையாக இருப்பது இந்த ஸ்டாலின்.
அதனால், கடந்த இரண்டு நாட்களாக பழனிசாமி என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? “ஸ்டாலின் போயி சேரணும்” என்று தன்னுடைய ஆழ்மன விருப்பங்களை, அடிமனதில் இருக்கும் வக்கிரங்களை எல்லாம், பழனிசாமி பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர், மதிப்பிற்குரிய, அன்புக்குரிய பழனிசாமி அவர்களே, பிறந்த எல்லோரும் இறக்கத்தான் போகிறார்கள். மரணம் எல்லோருக்கும் ஏதோ ஒருநாள் வரத்தான் போகிறது! இந்த ஸ்டாலினுக்கும் வரும். ஆனால், இந்த ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களும், அந்தத் திட்டங்களால் வாழ்வு பெற்றவர்களும் என்றென்றைக்கும் என்னை நினைவில் வைத்துக் கொள்வார்கள். அந்த நினைவுகள் வாழும், அதை யாராலும் அழிக்க முடியாது. நான் மண்ணுக்கு போகலாம், ஆனால் நான் கொண்டு வந்த திட்டங்ககள் என்றைக்கும் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும்.

என்னைப் பொறுத்தவரை, தலைசிறந்த தமிழ்நாட்டை – தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க என்னுடைய இறுதிமூச்சு வரை ஓய்வில்லாமல் உழைப்பேன்! என் சக்தியை மீறியும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசுகளும், தி.மு.க.-வும் இருக்கும்வரை பழனிசாமியின் எண்ணம் பலிக்கவே பலிக்காது. தமிழ்நாட்டு மக்கள் பழனிசாமியின் ஆணவப் பேச்சுக்கு முடிவுகட்ட, அதற்குரிய நாள்தான் ஏப்ரல் 23!” என தெரிவித்தார்.
