கூலி திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ஊடகங்களை சந்தித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளது. எனினும் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது ரஜினி மற்றும் லோகேஷ் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் படம் ரிலீசாகி 2 வாரங்களுக்கு பிறகு ஊடகங்களை முதன்முறையாக நேற்று (செப்டம்பர் 1) சந்தித்தார் லோகேஷ்.
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கருத்தரங்க நிகழ்ச்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொணடு, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மூன்று ஜாம்பவான்களிடம் கற்றுக்கொண்டது!
அப்போது அவர் கமல் – ரஜினி – விஜய் பற்றி கூறுகையில், “ நான் கமல் சாரின் ரசிகர் மட்டுமல்ல அவரின் தீவிரமான பக்தர். நான் இன்று இந்த நிலையில் இருக்க அதற்கு கமல் சார் தான் காரணம். அவரை பார்த்து தான் சினிமாவிற்கு வந்தேன். என் படங்களில் ஏதேனும் வித்தியாசமான முயற்சிகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு முழுக்க முழுக்க கமல் சார் தான் காரணம். அவர் படங்களை பார்த்து அவரை போல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.
மறுபக்கம் நான் தற்போது பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கின்றேன் என்றால், அதற்கு முழுக்க முழுக்க ரஜினி சார் தான். நிதானமாக இருப்பதற்கு அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். தளபதி விஜய் என் அண்ணா” என லோகேஷ் உருக்கமாக தெரிவித்தார்.
எதிர்பார்ப்புகளுக்காக கதை எழுத முடியாது!
மேலும் அவர், ”கூலியைப் பொறுத்தவரை, இது ஒரு டைம் டிராவல் கதையோ அல்லது LCU-வில் ஒரு பாகமோ என்று நான் சொல்லவேயில்லை.. நான் டிரெய்லரை கூட முதலிலேயே வெளியிடவில்லை, 18 மாதங்கள் அனைத்தையும் ரகசியமாகவே வைத்திருந்தேன்.
பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பு மற்றும் உற்சாகத்தைப் பற்றி நாம் குறை சொல்ல முடியாது. அது இல்லையென்றால் சினிமாவில் யாருமே பணியாற்ற முடியாது. நாம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தடுக்க முடியாது. ஆனால் என்னால் ஒருபோதும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்காக கதை எழுத முடியாது.. நான் ஒரு கதை எழுதுவேன்.. அது அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மகிழ்ச்சி. ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் நான் தொடர்ந்து முயற்சிப்பேன்.
வசூல் அள்ளுவது வெற்றி இல்லை!
நான் ஒரு உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டுமென நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததை பண்ணவில்லை. வெற்றி என்பது பாக்ஸ் ஆபிஸில் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவது அல்ல. வெற்றி என்பது படத்தை ஒரு இயக்குநராக பார்வையாளர்களுக்கு வழங்குவதுதான் முக்கியம். அதை தவிர வேறு ஒன்றுமில்லை. பாக்ஸ் ஆபிஸ் என்பது தயாரிப்பாளர்களுக்கானது. ஆனால் ஒரு இயக்குநராக உங்கள் வேலையை எவ்வளவு நேர்மையாக செய்கிறீர்கள் என்பது முக்கியம்.
திரைப்படம் பொழுதுபோக்குக்கு மட்டுமே!
ஒருபோதும் யாருடைய ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அடுத்தது, இணைந்து பணியாற்ற கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையை சினிமாவைப் பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தவறு. ஒரு சினிமா நம்மை பெரிய அளவில் பாதிக்கிறதென்றால், நாம் வளர்ந்த விதம் தவறாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு திரைப்படம் பொழுதுபோக்குக்கு மட்டுமே என்றும், அது நம்மை சிந்திக்கத் தூண்டலாம், ஆனால் அது மட்டுமே போதுமானது அல்ல” என லோகேஷ் பேசினார்.