மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை (ஜூலை 2) 1)திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். Link with DMK Vaiko warns Mallai Sathya
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன். இந்த அரசுக்கு எதிராக எந்த கட்டத்திலும் ஒரு வார்த்தை ஒரு விமர்சனம் நான் வைத்ததில்லை, வைக்கவும் மாட்டேன்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே திமுக ஆட்சி அமைக்கும். நாங்கள் திமுக கூட்டணியில் நீடிப்போம்” என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் 24ஆம் தேதி மதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்த திருப்பூர் முத்துரத்தினம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அவர் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர்.

2017 ஆம் ஆண்டு இந்தக் கூட்டணி அமைந்ததிலிருந்து மதிமுகவை சேர்ந்த எவரையும் திமுகவில் சேர்க்க ஸ்டாலின் மறுத்து வந்த நிலையில், கடந்த எட்டு வருடங்களில் முதல் முறையாக முத்துரத்தினத்தை முறைப்படி திமுகவில் சேர்த்துக்கொண்டார் ஸ்டாலின்.
அதற்கு காரணம் ஜூன் 22 ஆம் தேதி மதிமுக பொதுக்குழுவில் வைகோ முன்னிலையில் கட்சியின் அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் திமுகவை கடுமையாக விமர்சித்தது தான்.
இப்படி திமுகவுக்கும் மதிமுகவுக்கும் உறவு சரி இல்லை என்ற நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினை வைகோ சந்தித்து பேசி இருக்கிறார்.

திமுகவை ஆதரிப்போம் என வைகோ அறிவாலயத்தில் பேசி இருந்தாலும் கடந்த ஜூன் 29-ஆம் தேதி தாயகத்தில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் மீண்டும் திமுக எதிர்ப்பு வலுவாக இருந்திருக்கிறது என்கிறார்கள் மதிமுக நிர்வாகிகள்.
ஜூன் 30 ஆம் தேதி நிர்வாக குழு கூட்டத்தில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் பேசும்போது மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை நேரடியாகவே விமர்சித்தார்.
“2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் நாம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அப்போது அறிவாலயத்தில் நின்று பேட்டி கொடுத்த மல்லை சத்யா திமுகவின் சின்னத்தில் எங்களை போட்டியிடச் சொன்னது ஸ்டாலினுடைய பெருந்தன்மை என்று கூறினார். இப்போது வரை அவர் திமுகவுடன் ரகசிய உறவில் தான் இருக்கிறார். 2021ல் அவ்வாறு ஏன் பேட்டி அளித்தார் என மல்லை சத்யாவால் விளக்க முடியுமா?” என்று கேட்டார்.

இதற்கு துணை பொது செயலாளர் மல்லை சத்யா, “ஏற்கனவே என் மீது அபாண்டமாக பழி சுமத்தி வருகிறீர்கள். இப்போது 2021ல் நான் அளித்த பேட்டியை வைத்து நான்கரை வருடங்கள் கழித்து என்னிடம் விளக்கம் கேட்கிறீர்கள். கூட்டணியின் தலைமைக் கட்சி என்ற அடிப்படையில் அப்போது நான் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். இதில் என்ன தவறு? நான்கரை வருடம் முடிந்த நிலையில் அதற்கு இப்போது என்னிடம் விளக்கம் கேட்பது ஏன்?” என்று பதில் கொடுத்தார்.

அதன்பின் வைகோ நிறைவாக உரை ஆற்றும் போது மதிமுகவின் அண்ணா பிறந்தநாள் மாநாட்டுக்கு நிதி சேகரிப்பது பற்றியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்த வேண்டும். அதில் நான் வந்து பங்கேற்பேன் என்றும் நீண்ட நேரம் உரையாற்றினார்.
பேச்சை முடிக்கும் நிமிடங்களில் ஏற்கனவே துரை வைகோ ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் ஆகியோர் மல்லை சத்யா மீது என்ன குற்றச்சாட்டுகளை வைத்தார்களோ அதே குற்றச்சாட்டை வைகோவும் பகிரங்கமாக வைக்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
“அவைத்தலைவர் ஆடிட்டர் பேசிய பேச்சுக்கு மல்லை சத்யா இங்கு பதில் சொன்னார். ஆனால் நான் இப்போது கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியாது.
ஒரு காலத்தில் என்னோடு மிகவும் நெருக்கமாக இருந்த திருப்பூர் துரைசாமி, என் மனசாட்சியை போல நான் நேசித்த தம்பி வல்லம் பஷீர் உள்ளிட்டவர்கள் எல்லாம் இன்று வெளியே சென்று என் மீது அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் மல்லை சத்யா நீங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். திருப்பூர் முத்துரத்தினம் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை நீங்களும் அவரும் ஒரே காரில் சென்றிருக்கிறீர்கள். இதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைக்கிறீங்களா?
எனக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து லாபி செய்து கொண்டிருக்கிறீர்கள். விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள். இல்லைன்னா போயிடுங்க” என்று மல்லை சத்யாவை நோக்கி காட்டமாக பேசிவிட்டு அமர்ந்தார் வைகோ.

இதைக் கேட்டு உறைந்து போன சத்யா கூட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் அரங்கத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டார்.
கடந்த நிர்வாக குழு கூட்டத்தில் இதே போன்ற குற்றச்சாட்டுகளை துரை வைகோ முன் வைத்த போது, “மல்லை சத்யா என் உயிரை காப்பாற்றியவர்” என்று சிலாகித்த வைகோ ஜூன் 29-ஆம் தேதி நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் ஏற்கனவே துரை வைகோ வைத்த அதே குற்றச்சாட்டுகளைத் தானே பகிரங்கமாக மல்லை சத்யா மீது வைத்திருக்கிறார் என்பது தான் மதிமுகவுக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சங்கதி.
இதுகுறித்து நாம் மல்லை சத்யா வட்டாரங்களில் விசாரித்தோம்.
“மதிமுகவில் கடந்த 2023 இல் உட்கட்சி தேர்தல் நடந்த போது வைகோவை சந்தித்து மல்லை சத்யா ஒரு வேண்டுகோள் வைத்தார்.
எனக்கு மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் போன்ற கட்சி பதவிகள் வேண்டாம். சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை. அதனால் நீங்கள் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் என்னை ராஜ்யசபா எம்பி ஆக டெல்லிக்கு அனுப்பி வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார் மல்லை சத்யா.
மல்லை சத்யா அப்போது வைகோ வகித்து வந்த ராஜ்யசபா எம்பி பதவிக்கு ஆசைப்படுகிறார் என்று குடும்ப வட்டாரங்களில் பெரிதாக பேசப்பட்டது.
இது மட்டுமல்ல கடந்த ஜூன் 17 ,18, 19 தேதிகளில் மல்லை சத்யா லண்டன் பயணம் மேற்கொண்டார். வைகோவை போலவே கருப்பு துண்டு அணிந்து கொண்டு லண்டனில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் நடத்திய நிகழ்வில் பங்கேற்றார் சத்யா. இதை வைகோ, துரை வைகோ இருவருமே ரசிக்கவில்லை” என்கிறார்கள்.

அவர்களிடமே மல்லை சத்யா மதிமுகவில் நீடிப்பாரா அல்லது திமுகவில் இணைவாரா என்று கேட்டோம்.
“கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நிர்வாக குழு கூட்டத்திலேயே என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என்னை வெளியேற்றுங்கள் என்று மல்லை சத்யா வேண்டுகோள் விடுத்தார். அவராக துரோகி பட்டத்தை சுமந்து கொண்டு வெளியேற மாட்டார். தன்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்” என்கிறார்கள்.
தாயக வட்டாரத்தில் இது குறித்து பேசியபோது,
“மல்லை சத்யாவை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்தார் வைகோ. மதிமுகவில் அவருக்கு எவ்வளவு உயரங்கள் அளிக்க முடியுமோ அவ்வளவையும் அளித்தார்.
ஜனநாயக ரீதியாக நிர்வாக குழு கூட்டத்தின் முடிவின்படி தான் துரை வைகோவுக்கு முதன்மை செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஆனால் துரை வைகோவை ஆரம்ப கட்டத்தில் இருந்தே மல்லை சத்யா ஏற்றுக்கொள்ளவில்லை. மல்லை சத்யாவின் தீவிர ஆதரவாளர்கள் துரை வைகோ மீது சமூக தளங்களில் வெவ்வேறு வகையான குற்றச்சாட்டுகளை வீசினார்கள். உச்சகட்டமாக துரை வைகோ சாதி ரீதியாக செயல்படுகிறார் என்றெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்.
கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற உயர்ந்த இடத்தில் மல்லை சத்யா இருந்த போதிலும் கட்சி விவகாரங்களை கட்சிக்கு அப்பாற்பட்ட இடங்களில் விவாதிப்பதும் விமர்சிப்பதும் துரை வைகோவின் கவனத்திற்கு நேரடியாக வந்தது. அதை அவர் வைகோவிடம் தெரிவித்த போது வைகோ முதலில் அதை நம்பவில்லை ஏற்கவும் இல்லை.

ஆனால் கடந்த நிர்வாக குழு கூட்டத்திற்குப் பிறகு மல்லை சத்யாவின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் இருந்தன. திருப்பூர் முத்துரத்தினமும் மல்லை சத்யாவும் ஒரே காரில் சென்றதையும், அடுத்த சில நாட்களில் முத்துரத்தினம் திமுகவில் சேர்ந்ததையும் துரை வைகோதான் வைகோவிடம் தெரிவித்தார். இதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு தான் துரை வைகோ எடுத்த நிலைப்பாட்டை இப்போது எடுத்திருக்கிறார் வைகோ” என்கிறார்கள்.
மல்லை சத்யா கட்சியில் இருந்து வெளியேறினாலோ அல்லது வெளியேற்றப்பட்டாலோ திமுகவில் இணைவதற்குதான் முயற்சி செய்வார். அப்போது ஸ்டாலின் எடுக்கும் முடிவு திமுக, மதிமுக கூட்டணியில் உறவை வளர்க்குமா? முரண்பாடுகளை உருவாக்குமா? என்பதை நிர்ணயிக்கும். Link with DMK Vaiko warns Mallai Sathya