தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன..
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் இன்று பிரசாரத்தை மதுரையில் தொடங்கினார். முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் தரிசனம் செய்தார்.

இதற்கான தொடக்க விழா, அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் மாலையில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 88 பேர் கள்ளசாராயத்தால் உயிரிழந்துள்ளனர். கரூரில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள் ? உண்மை என்னவென்றால், கரூரில் 100 காவலர்கள் கூட பாதுகாப்பிற்காக இல்லை. ஆனால், நேற்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு 6 துணை ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 42 காவல் ஆய்வாளர்கள், 87 துணை ஆய்வாளர்கள் உட்பட 1,100 காவலர்களை அனுப்பியது திமுக அரசு. இதிலிருந்தே, திமுக அரசின் அக்கறை எங்கே இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும். இப்படிப்பட்ட திமுக ஆட்சி 2026 தேர்தலில் அகற்றப்படவேண்டும். அதற்காக பாஜகவின் ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டனும் கடுமையாக உழைக்கவேண்டும் என்றார்.
நயினார் நாகேந்திரன், நாளை 13-ம் தேதி சிவகங்கை, 14-ம் தேதி செங்கல்பட்டு வடக்கு, 15-ம் தேதி சென்னை வடக்கு, 16-ம் தேதி மத்திய சென்னையிலும் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதையடுத்து தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு வரும் 24-ம் தேதி அரியலூர், பெரம்பலூர், 25-ம் தேதி தஞ்சாவூர் வடக்கு, 27-ம் தேதி திருச்சி, 28-ம் தேதி திண்டுக்கல் கிழக்கு, 29-ம் தேதி நாமக்கல் கிழக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி ஈரோடு தெற்கு, 4-ம் தேதி கோவை வடக்கு, 5-ம் தேதி நீலகிரி, 6-ம் தேதி திருப்பூர் தெற்கு என தொடர்ந்து 28 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நயினார் நாகேந்திரன், நவ.22-ம் தேதி தூத்துக்குடி தெற்கில் நிறைவு செய்கிறார். பின்னர் இரண்டாம் கட்ட பயணத்தை தேனியில் நவ.24-ம் தேதி தொடங்குகிறார்.
