யார் இந்த தளி ராமச்சந்திரன்?

Published On:

| By Balaji

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி, திங்கட்கிழமை வெளியிட்டது. மக்கள் செல்வாக்குப் பெற்ற பல நல்ல வேட்பாளர்களை களமிறக்கியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தளி தொகுதியில் களமிறக்கியிருக்கும் வேட்பாளர் ராமச்சந்திரன். தன் பெயரோடு தன் ஊரின் பெயரையும் இணைத்துக் கொண்டு தளி ராமச்சந்திரன் என்று அடையாளப்படுத்தப்படும் இவர் யார்? இந்தக் கேள்வியின் பின்னணியில் உள்ள உண்மைகள் இங்கே….

90-களில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய தளி ராமச்சந்திரன் 2006-ம் ஆண்டு சிபிஎம் கட்சியில் இணைந்தார். 2006 சட்டமன்ற தேர்தலில் தளி தொகுதிக்குப் போட்டியிட விருப்பமனுவும் கொடுத்தநிலையில், தளி தொகுதியை திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதால் சிபிஎம் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்த தளி ராமச்சந்திரன் ஏமாந்து போனார். சிபிஐ வேட்பாளராக களமிறங்கிய நாகராஜரெட்டிக்கு எதிராக சுயேட்சையாக களமிறங்கிய ராமச்சந்திரன், நாகராஜரெட்டியை வென்றார். சுயேட்சையாக வெற்றிபெறும் அளவுக்கு தொகுதிக்குள் செல்வாக்கு அவருக்கு. அவர் எந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்து வென்றாரோ அதே கட்சி அவரை அரவணைத்துக் கொண்டது. சுயேட்சையாக வென்ற ராமச்சந்திரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகராக வலம் வந்தார்.

ADVERTISEMENT

2011-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர், தன் கிரானைட் சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 கிரானைட் மலைகளில் அரசு நிறுவனமான டாமினுக்கு 4 குவாரிகளும், தனியாருக்கு 119 குவாரிகளும் உள்ளன. இங்கு கிரானைட் வெட்டி எடுக்கப்படும்போது ஒரு சதுர மீட்டருக்கு 2,250 ரூபாய் கட்டணமாக அரசுக்குக் கொடுக்கவேண்டும். இந்தவகையில் மட்டும் இங்கு வருடத்துக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அரசு விதிமுறைகளுக்கு மாறாக கிரானைட்டை வெட்டி எடுப்பதும், வெட்டிய கற்களுக்கு கட்டணம் செலுத்தாமலும் ஏமாற்றின. மேலும், இந்த குவாரிகளில் இருந்து கறுப்பு கிரானைட் கற்களை வெட்டி, ஒசூர் அருகே உள்ள சூளகிரி கிரானைட் தொழிற்சாலைகளில் பலகை, பலகைகளாக துண்டாக்கி, பாலீஷ் போட்டும் தனியார் முதலாளிகள் வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளனர்.

எம்எல்ஏ தளி ராமச்சந்திரன், அவரது மனைவி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான 11 கல் குவாரிகளில் இப்படி சட்டவிரோதமாக கல்வெட்டி திருடிச் சென்றது கடந்த 2012-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 39 ஆயிரம் கனமீட்டர் அளவு கொண்ட கற்களை அனுமதியின்றி வெட்டியது உட்பட வேறு பல புகார்களும் அவர்மீது பதிவுச் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ராமச்சந்திரனின் கிரானைட் முறைகேடு உள்ளிட்ட பல சமூகவிரோதச் செயல்களுக்கு எதிராகப் போராடினார், பெரியார் திராவிடர் கழகத் தொண்டர் பழனி. அவரை விலைகொடுத்து வாங்கும் முயற்சிகள் வீணாகப் போக, போர்க்குணம் கொண்ட பழனி 2012-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார்.

இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உட்பட 17 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 3 கொலை வழக்குகள் உட்பட 20 வழக்குகள் இவர்மீது உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் போட்ட அபராதத் தொகைக்கு தன் இரண்டாவது மனைவி விமலா மூலம் தடையாணை பெற்றார் ராமச்சந்திரன். அடியாள் பலம், பண பலம் உட்பட பல அஸ்திரங்களை ஏவும் இவர்மீது உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் (16/20014 என்ற எண்ணின் கீழ்) ரவுடிகள் பட்டியலில் இவர் பெயர் உள்ளது. நடப்பு எம்எல்ஏ-வாக இருக்கும்போதே ரவுடிப் பட்டியலில் இடம்பெற்ற எம்எல்ஏ இவர் மட்டுமே என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

ADVERTISEMENT

ஏன் இந்த நிலை?

அரசியல் கிரிமினல் மயமாகி விட்டது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகிறது. அரசியல் கிரிமினல் மயமாவதைத் தடுக்க மத்திய அரசு ஓரா கமிட்டியை அமைத்தது. நீதித்துறைச் சார்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் அரசியலில் குற்றப்பின்னணி உள்ளவர்களை அங்கீகரிக்கக்கூடாது என்று கோரி வருகின்றனர்.

இந்திய அளவில் குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் தொடர்பான பட்டியல் பலமுறை வெளிவந்த போதிலும் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறது சட்டம். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 845 வேட்பாளர்களில் 103 பேர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்று தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு தன்னார்வக்குழு அறிவித்தது. ஒவ்வொரு அரசியல்கட்சிக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதில் நெருக்கடி இருக்கிறது. பெரும்பாலும் அரசியல்மீது மக்கள் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில் மக்களிடம் நல்ல பெயர் பெற்ற வேட்பாளர்களையே கட்சிகள் களத்தில் நிறுத்த முயல்கின்றன. ஆனால், எளிமையான, மத சார்பற்ற கட்சியாக கருதப்படும் இடதுசாரிக் கட்சியில் எம்எல்ஏ-வாக இருந்தபோதே கொலை வழக்கில் சிக்கியவருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை கம்யூனிஸ்ட் கட்சி வழங்கலாமா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share