விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள் – KVN நிறுவனம் எச்சரிக்கை

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Jana Nayagan

விஜய்யின் ஜனநாயகன் படத்தை வாஸ்அப், பேஸ்புக், யூடியூப் என எந்த விதத்தில் பகிர்ந்தாலும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கே.வி.என்.தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ள சம்பவம் படக்குழுவினரிடேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் கவனத்திற்கு வந்த தகவலின்படி, அடையாளம் தெரியாத சில நபர்களால் ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள், கிளிப்புகள் மற்றும் சில இடங்களில் படத்தின் பெரும்பகுதி சட்டவிரோதமாக அணுகப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பரப்பப்பட்டு வருகிறது. இது டிஜிட்டல் திருட்டு எனும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

ADVERTISEMENT

வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட் (Torrents) அல்லது வேறு எந்த ஊடகத்தின் மூலமாகவும் இவ்வாறு கசிந்த உள்ளடக்கத்தை தரவிறக்கம் செய்வது, பார்ப்பது, சேமிப்பது, பகிர்தல் அல்லது பரப்புவது ஆகியவை காப்புரிமைச் சட்டங்களின்படி கடுமையான குற்றமாகும்.

ஒவ்வொரு டிஜிட்டல் நடவடிக்கையும் கண்காணிக்கப்படக்கூடியது. இதில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தடயவியல் ஆய்வுகள் மற்றும் புகார்கள் உட்பட தேவையான விசாரணைகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளோம். இந்த சட்டவிரோதச் சங்கிலியில் தொடர்புடைய அனைவரையும் நாங்கள் தீவிரமாகக் கண்டறிந்து வருகிறோம். இதில் ஈடுபடும் ஒவ்வொருவர் மீதும் விதிவிலக்கின்றி கடுமையான சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

இத்தகைய கசிந்த காட்சிகளுடன் எந்த வகையிலும் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட எவரும் அதன் விளைவுகளுக்குத் தாங்களே பொறுப்பேற்க நேரிடும் என்பதோடு, உடனடி சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள நேரிடும். உங்களுக்கு இத்தகைய தகவல்கள் வந்தால், அதைத் திறக்கவோ, சேமிக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம். உடனடியாக நீக்கிவிடவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share