எதிர்பாராத ஒரு திரையனுபவம்!
தமிழில் சின்ன பட்ஜெட்டில் தயாராகிற படங்கள் பெரிய வரவேற்பைப் பெறுவது அரிதாக நிகழ்ந்து வருகிறது. அதுவும் கூட, குறிப்பிட்ட நிறுவனங்கள் விநியோகஸ்தராக இணைகிறபோது வெளிச்சத்தைப் பெறுகின்றன. அதன் வழியே ஊடகங்களில் அப்படங்கள் குறித்து ரசிகர்கள் பல தகவல்களை அறிய நேரிடுகிறது. அவ்வாறில்லாத பட்சத்தில், குறிப்பிட்ட படத்தில் ட்ரெய்லர் அல்லது ஆடியோ வெளியீட்டு விழாவோ, பத்திரிகையாளர் சந்திப்போ, அப்படியொரு கவனிப்பைப் பெறச் சில நேரங்களில் வழி வகுக்கின்றன.
அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்த திரைப்படம் ‘குற்றம் புதிது’.
நோவா ஆர்ம்ஸ்ட்ராங் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதன் ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார், ராமச்சந்திரன் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சரி, ‘குற்றம் புதிது’ அப்படியென்ன அனுபவத்தைத் திரையில் தருகிறது?

வழக்கமான ‘த்ரில்லரா’?
ஒரு போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனரின் மகள் காணாமல் போகிறார்.
அடுத்த நாள் காலையில், அருகிலுள்ள பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கொலை நிகழ்ந்ததாகத் தகவல் கிடைக்கிறது. அதற்கேற்றவாறு அந்த அறையில் ரத்தக்கறைகள் நிறையவே இருக்கின்றன. தடயங்கள் அழிக்கப்பட்டதும் தெளிவாகத் தெரிய வருகிறது.
அந்த அறையில் இருந்த நபர் ஆட்டோ ஓட்டும் வேலையை செய்து வருபவர். அவர் சொந்த ஊருக்குப் போயிருப்பதாகக் காவல் துறையினர் விசாரணையில் தெரிய வருகிறது.
இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் அந்த அறைக்கு அருகிலுள்ள இன்னொரு அறையில் தங்கியிருப்பவரை போலீசார் விசாரிக்கின்றனர்.
அந்த இளைஞர் ஒரு ‘புட் டெலிவரி’ ஊழியர். முந்தைய நாள் இரவு ஒரு மருத்துவமனைக்கு, ஒரு அபார்ட்மெண்டுக்கு சென்றதாகச் சொல்கிறார்.
போலீசார் விசாரணையில் அந்த இளைஞர் சொன்னது உண்மை என்றே தெரிய வருகிறது.
ஆனால், இரண்டு நாட்கள் கழித்து அதே நபர் போலீசில் தானாகச் சரணடைகிறார். தான் அந்த இளம்பெண்ணைத் துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றதாகச் சொல்கிறார். அதனைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சியடைகின்றனர்.
அவரது பேச்சும் செயல்பாடுகளும் ‘அவர் மனநிலை சரியாகத்தான் இருக்கிறதா’ என்ற கேள்வியை அவர்களிடையே எழுப்புகிறது.
ஆனாலும், தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அவர் சொல்கிற தகவல்களைச் சரிபார்க்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபடுகின்றனர்.
அப்போது, அதிரவைக்கும் ஒரு உண்மை தெரிய வருகிறது.
அது என்ன? அந்த இளம்பெண் எப்படி, எங்கே, ஏன் கொலை செய்யப்பட்டார்? காணாமல் போன ஆட்டோ ஓட்டுநர் என்ன ஆனார் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இப்படத்தின் முன்பாதியில் சில காட்சிகள் ‘இது ஒரு சைக்கோபாத் கதையா’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. பின்பாதியோ அதற்கு நேரெதிரான திசையில் செல்கிறது.
இரண்டையும் சமநிலையில் இருத்துவது போன்று ‘கிளைமேக்ஸ்’ அமைந்துள்ளது. மேலும், ‘அடுத்த பாகம் உண்டு’ என்பதாக ஒரு காட்சியும் இதில் வந்து போகிறது.
இது போன்ற படங்களுக்கே அந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று நம்மைச் சொல்ல வைக்கிறது ‘குற்றம் புதிது’. அதுவே இப்படத்தின் வெற்றி..!

இயக்குனரின் வெற்றி..!
குற்றம் புதிது என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு இப்படத்தை ‘ஜட்ஜ்’ செய்வது தவறாகத்தான் இருக்கும். போலவே, ட்ரெய்லர் தந்த அனுபவத்திற்கும் படத்திற்கும் பெரிதாகச் சம்பந்தம் இருக்காது.
ஆனாலும், படம் பார்த்தபிறகு ஒரு திருப்தி கிடைக்கும். அதனைத் தந்திருப்பதே இயக்குனர் நோவா ஆர்ம்ஸ்ட்ராங்கின் வெற்றி.
அதற்கேற்றவாறு பின்னணி இசை அமைத்துள்ள கரண் கிருபா, விறுவிறுப்பான காட்சியாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் கமலகண்ணன் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குனரின் கற்பனைக்குத் தோள் கொடுத்திருக்கின்றனர்.
நாயகனாக நடித்துள்ள தருண் விஜய் ’ஓகே’ என்று சொல்லும்படியாக நடித்திருக்கிறார். அவரது பாத்திர வார்ப்பும் அந்த வகையிலேயே இருக்கிறது.
அதற்குச் சேர்த்து வைத்து, பின்பாதியில் அசத்தியிருக்கிறார் நாயகி சேஷ்விதா கனிமொழி. என்ன, முன்பாதியில் அவரை ‘டாம்பாய்’ போல உலா வரவிட்டதைச் சற்று தவிர்த்திருக்கலாம்.
இந்த படத்தில் மதுசூதன் ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார், ராமச்சந்திரன் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக உள்ளது. இது போக போலீஸ் கமிஷனராக வருகிற பாய்ஸ் ராஜன், இதர போலீசாராக நடித்த ஆண்கள், பெண்கள் அனைவருமே முன்பாதியில் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ படம் பார்த்தபோது சிலருக்கு புதுவிதமான திரையனுபவம் கிடைத்த உணர்வு எழுந்தது. கிட்டத்தட்ட அதே போன்றதொரு அனுபவத்தைத் தர முனைந்திருக்கிறார் நோவா ஆர்ம்ஸ்ட்ராங்.
இப்படத்தின் கதையையோ, காட்சியமைப்பையோ புதிதென்று சொல்ல முடியாது. ஆனால், ரசிகர்கள் ரசிக்கிற வகையில் திரைக்கதையையும் காட்சியாக்கத்தையும் அவர் அமைத்திருப்பது சிறப்பு.
அதுவே, சிறு பட்ஜெட் படமான ‘குற்றம் புதிது’வுக்குக் கூட்டம் சேர வழி வகுத்திருக்கிறது. எதிர்பாராத திரையனுபவத்தைத் தருகிறது.