தரமான, சிறப்பான செய்கை..!
நாடக பாணியில் கதை சொல்லும் உத்தி நிறையவே போரடிக்கும். சிறப்பான பாத்திர வார்ப்பு, களத்திற்கேற்ற வசனங்கள், யதார்த்த வாழ்வை ஒட்டிய காட்சி அமைப்பு, அதனூடே பாய்கிற கதைப்பரவல் உள்ளிட்ட சில விஷயங்கள் அமைகிற பட்சத்தில், அந்த உத்தி பார்வையாளர்களை எளிதாகத் திரையோடு பிணைக்கும்.
அதனைப் பயன்படுத்தி, திரையில் கதை சொல்ல முயன்றிருக்கிறது பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள ‘குமார சம்பவம்’. தொலைக்காட்சித் தொடர்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருபவர்களுக்கு நன்கு அறிமுகமான குமரன் தியாகராஜன், பாயல் ராதாகிருஷ்ணா ஆகியோர் இதில் முதன்மை பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். குமரவேல், ஜி.எம்.குமார், பாலசரவணன், வினோத் சாகர், லிவிங்க்ஸ்டன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், கௌதம் சுந்தர்ராஜன், அர்ஜெய் உள்ளிட்டோர் இதில் அவர்களோடு நடித்துள்ளனர்.
‘குமார சம்பவம்’ தரும் திரையனுபவம் எப்படி இருக்கிறது?
கொலையாளி யார்?
ஒரு கதையை எப்படித் திரையில் சொல்லப் போகிறோம் என்ற கேள்விக்கான பதிலை அறியும்போதே, அதனைப் பார்வையாளர்கள் ஏற்பார்களா, இல்லையா என்பதும் தெளிவாகத் தெரிந்துவிடும்.
‘குமார சம்பவம்’ படமானது ஒரு சமூக ஆர்வலர் பிணமாகக் கிடப்பதில் இருந்து தொடங்குகிறது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அது இயற்கை மரணமா என்ற கேள்விக்கான பதிலை அறிய, அவர் சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
சில மணி நேரங்களிலேயே, அவர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்த விஷயம் உடற்கூறாய்வில் இருந்து தெரிய வருகிறது.
அதையடுத்து கொலையான நபர் வாடகைக்குத் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளர், குடும்பத்தினர், பழகிய நபர்கள், அவர் கையிலெடுத்த சமூகப் பிரச்சனையால் எரிச்சலுற்ற மனிதர்கள் எனச் சிலர் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர்.
அந்த வீட்டு உரிமையாளரின் பேரன் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொலையான நபர் பற்றிய கருத்துகளைச் சொல்லத் தொடங்குகிறார்.
அதன் வழியே கொலையான நபர் எப்படிப்பட்டவர் என்ற விவரம் தெரிவதோடு, அந்த வீட்டு உரிமையாளரோடும் அவரைச் சார்ந்தவர்களோடும் அந்த நபர் கொண்டிருந்த உறவு எத்தகையது என்பது படிப்படியாகத் தெரிய வருகிறது.
இறுதியாக, அந்த நபர் எப்படி இறந்தார் அல்லது கொலையாளி யார் என்பதைச் சொல்வதாகப் படம் முடிவடைகிறது.
இந்த இடைவெளியில் பார்வையாளர்கள் சிரிக்கவும் ரசிக்கவும் கூடிய வகையில் கதை சொல்லியிருப்பதே ‘குமார சம்பவம்’ படத்தின் வெற்றி.
இறுதியாக வரும் ’டைட்டில் கிரெடிட்’ உடன் சில பாத்திரங்கள் குறித்த பின்குறிப்புகளைத் தருகிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். அதனூடே ‘மேக்கிங்’கையும் இணைத்திருக்கிறார். அந்த ஒரு இடத்தில் மட்டுமே அவரது முடிவு நமக்குத் தெளிவற்றதாகத் தெரிகிறது.
வித்தியாச ‘திரையனுபவம்’!

நாயகன் குமரன் தியாகராஜன் சில காட்சிகளில் வசனங்களை ‘உரக்க’ப் பேசியிருக்கிறார். மிகச்சில இடங்களில் ‘என்ன அசமந்தமா நிக்குறார்’ எனும்படியாக இருக்கிறார். இரண்டுக்கும் இடையேயான வெளியை நிரப்ப, இந்த முதல் பட அனுபவம் உதவியாக இருக்கும்.
நாயகி பாயல் ராதாகிருஷ்ணா முகம் சட்டென வசீகரிக்கக்கூடியதாக உள்ளது. நடிப்பும் ஓகே ரகம். ஆனால், அவரைச் சிறப்பாகக் காட்டக்கூடிய காட்சிகள் இதில் பெரிதாக இல்லை.
நகைச்சுவையைப் பொறுத்தவரை பாலசரவணன், வினோத் முன்னா, அவரது மகனாக நடித்தவர் மற்றும் வினோத் சாகர் சம்பந்தப்பட்ட காட்சிகள் வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்குச் சிரிப்பூட்டுகின்றன.
பெரும்பாலும் வசன நகைச்சுவை என்றாலும், மௌனத்திற்கு இடம் தந்து அந்த ‘டைமிங்’கை கையிலெடுத்திருக்கின்றனர் மேற்சொன்ன கலைஞர்கள். குறிப்பாக, ‘சைக்கோ’ பாத்திரங்களில் மட்டுமே வினோத் சாகர் நடிக்க வைக்கப்படுவதை, அவரைக் கொண்டே கிண்டலடிக்கிறது இப்படம்.
’டாக்டர்’ புகழ் சிவா அரவிந்த் இதில் இன்ஸ்பெக்டராக வருகிறார். கான்ஸ்டபிளாக வரும் கோபால் உடன் அவர் வருகிற இடம், திரைக்கதையோடு பார்வையாளர்களை ஒன்ற வைக்கிற ஆரம்பப்புள்ளியாக உள்ளது.
ஜி.எம்.குமார், குமரவேல் வருகிற காட்சிகள் குறைவு; ஆனால், இக்கதை முழுக்கவே அவர்களது பாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது.
இப்படத்தில் லிவிங்ஸ்டன், அர்ஜெய், சார்லஸ் வினோத், விஜய் ஜாஸ்பர், சரவணன், கே.கோபால், டெலிபோன் ராஜ் எனப் பலர் தலைகாட்டியிருக்கின்றனர்.
நாயகனின் தாய், தங்கையாக நடித்தவர்கள் உட்பட மேலும் சிலர் இதிலுண்டு.
‘இட்லி வடையில முதல்ல எதை ஒருத்தன் சாப்பிடுறான்கறதை வச்சு, அவனோட குணத்தை எடை போடலாம்’, ‘பீச் ஹவுஸ்ல இருக்குற நீங்கதான் நிறைய ‘வேவ்’ பார்க்கலாம்’, ‘ரெண்டு துப்பாக்கி வச்சுக்க நான் என்ன கௌபாயா’ என்பது போன்ற வசனங்கள் ஆங்காங்கே ’குபீர்’ சிரிப்பை வரவழைக்கின்றன. அவற்றில் சில நாம் ஏற்கனவே கேள்விப்பட்டவை என்றாலும், அந்த ‘டைமிங்’ அபாரம்.
காட்சியின் தன்மையைக் குலைக்காமல், கதையை மீறிச் செல்லாமல், பாத்திர வார்ப்புக்கு அநியாயம் செய்யாமல் இப்படிப்பட்ட வசனங்களைப் புகுத்துவதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.
அந்த வகையில் நம்மை ‘வாவ்’ சொல்ல வைக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
கேமிரா கோணங்கள், அசைவுகள், பிரேம்களில் நிறைந்திருக்கும் ஒளிக்கலவை என்று பல விஷயங்களில் ‘நாடகத்தனம்’ நிறைந்திருக்கிறது. அவ்வளவு ஏன், பாத்திரங்களின் இருப்பும் நடமாட்டமும் கூட அப்படித்தான் இருக்கின்றன. ஆனால், அவற்றைத் தனது கதை சொல்லலுக்கு ஏற்ப லாவகமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதுவே ‘குமார சம்பவம்’ படத்தைத் தனித்துவமானதாகக் காட்டுகிறது.
ஒளிப்பதிவாளர் ஜகதீஷ், கலை இயக்குனர் கே.வாசுதேவன், படத்தொகுப்பாளர் மதன் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குனரின் எண்ணத்திற்கு உயிரூட்டியிருக்கின்றனர்.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி உழைப்பில் பாடல்கள் ‘ஓகே’ ரகம். அதைவிடப் பன்மடங்கு ஈர்ப்பைத் தனது பின்னணி இசையில் கலந்திருக்கிறார் மனிதர்.
இது போன்ற நகைச்சுவைப் படங்களில் இசையே பெரும்பலமாக, கண்களுக்குப் புலப்படாத பாத்திரமாகத் திகழ வேண்டும். அதனைச் செய்திருக்கிறார் அச்சு.
நகைச்சுவை தோரணங்கள் நிறைந்த ஒரு மேடை நாடகத்தின் வழியே, ஒரு ‘கல்ட் கிளாசிக் திரில்லர்’ கதையை நமக்குக் கடத்துவது கடினம். ஒரு சினிமாவாக, அதனைச் செய்திருக்கிறது ‘குமார சம்பவம்’.
கடைசி பிரேம் வரை கதையில் இருக்கும் கேள்வியை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. ஒரு இயக்குனராக, அதனைச் சாதித்திருக்கிறார் பாலாஜி வேணுகோபால்.
செய்தித்தாள்களை வீடுகளில் கொடுக்கிற மனிதர்களது உணர்வுகளையும் கூட, போகிற போக்கில் சொல்லிச் செல்ல முயன்றிருக்கிறார்.
அந்த ‘பன்முக’ச் சிந்தனையைக் கைவிடாமல் அடுத்தடுத்த படைப்புகளிலும் தொடரும் பட்சத்தில், இது போன்ற திரையனுபவங்களைத் தொடர்ந்து தரலாம். அதற்கான விதையாக இப்படம் அமைந்தால், இது தரமான, சிறப்பான செய்கையாக மாறும். ‘குமார சம்பவம்’ குழுவினருக்கு வாழ்த்துகள்!