ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தின் டாஸ் போடும் நிகழ்வின் போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆஹாவுடன் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், மீண்டும் கை குலுக்க மறுத்த சம்பவம் பேசு பொருளாகி இருக்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் இரு நாடுகளும் கிரிக்கெட் யுத்த களத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 14) இரவு இந்தியா- பாகிஸ்தான் போட்டிகள் தொடங்கும் போது டாஸ் போடும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சல்மான் அலி ஆஹாவுடன் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கை குலுக்க மறுத்தார்.
இதேபோல ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அறிமுக நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போதும் பாகிஸ்தான் கேப்டனுடன் சூர்யகுமார் யாதவ் கை குலுக்காமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
