இசைஞானி இளைய ராஜா திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் நேற்று (செப்டம்பர் 13) பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்று பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று இசைஞானி இளையராஜா தனது இன்ஸ்டா பதிவில், நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வணக்கம், தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மனநெகிழ்வால் எனக்கு சரியாக பேச்சு வரவில்லை. உள்ளத்தில் நினைப்பது எல்லாம் வெளியில் வார்த்தையாக வருவது அந்தந்த நேரத்தை பொறுத்தும் சூழ்நிலையை பொறுத்தும் அமைவது. ஆனால் நேற்று எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. அவ்வளவு ஆனந்தம்.
ஒரு பாராட்டு விழாவை ஒரு முதல்வர், அரசு இவ்வளவு முனைப்புடன் நடத்தியது நம்ப முடியாததால்தான் எனக்கு பேச முடியவில்லை. என் மீது ஏன் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்தேன் என தெரியவில்லை. நான் உருவாக்கிய இசையாக இருக்கலாம். நான் இதை எதிர்பார்ப்பவன் அல்ல. ஆனால் அப்படிப்பட்ட ஒருவனுக்கு சிம்பொனியின் சிகரம் தொட்டதால்தான் முதல்வர் பாராட்டு விழாவை முக்கியமாக கருதியிருக்கிறார் என்று இப்போது எனக்கு புரிகிறது.
ஆனால், இந்த சிம்பொனி இசையின் முக்கியத்துவத்தை அறிந்த தமிழக முதல்வர், உலக சாதனையைச் செய்த தமிழனைத் தமிழக அரசு பாராட்டுவது கடமை என கருதி உள்ளார் என நான் நினைக்கிறேன்.
முதல்வர் என்னிடம் சங்க இலக்கிய நூல்களுக்கு இசையமைக்க வேண்டும். உங்களை தவிர வேறு யாரும் அதை செய்ய முடியாது என்று சொன்னது எனக்கு மேலும் மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. நிச்சயம், முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன். மற்றபடி விழாவில் எந்த குறையும் இல்லை.
நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமல் ஹாசனும் வந்து சிறப்பித்தது, விழாவுக்கு மகுடம் சேர்த்தது போல் இருந்தது.
விழாவிற்கு வந்தவர்கள் சிம்பொனி எப்படி இருந்தது என்றும், எங்களது 50 வருட திரையுலக வாழ்க்கை எப்படி இருந்தது என்றும் பேசாதது சிறிய வருத்ததைக் கொடுத்தது.
பல மேடைகளில் நடிகர் கமல் ஹாசன் ரஜினி காந்துக்கு மட்டும் நல்லபாட்டு போடுகிறீர்கள் என்றும், ரஜினிகாந்த் கமலுக்கு நல்ல பாட்டு போடுகிறீர்கள் என்றும் சொல்வார்கள்.. ஆக இரண்டு பேருக்கும் நல்ல பாட்டு போட்டேன் என்பதற்கு அவர்கள் இருவரது வார்த்தைகளே சாட்சி.
விழாவிற்கு வந்தவர்கள் சிம்பொனி இசையை கேட்டது எனக்கு மகிழ்ச்சி. தமிழக மக்கள் எல்லோரும் வந்து சிம்பொனி இசையை கேட்க முடியாத அளவிற்கு அந்த இடத்தின் அமைப்பு இருந்தது. இதனால் நான் மேடையில் சொன்னது போல தமிழக மக்களுக்காக நான் ஒரு சிம்பொனி நிகழ்ச்சியை நடத்துவேன். நீங்கள் அதை எதிர்பார்க்கலாம். நானும் அந்த நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
