அரசியல் தெரிந்தவர்கள் பற்றி நாம் விமர்சிக்கலாம். ஆனால் விஜய் நேற்று தான் வந்திருக்கிறார் என பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் (ஏப்ரல் 4) நேற்று புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மணவெளி பகுதியில் வாக்கு சேகரித்தபோது, “வேட்பாளர் செல்வத்திற்கு வாக்களியுங்கள்” என்று மக்களிடம் பேசினார். அப்போது அங்கிருந்த தவெக வேட்பாளர் ராமு அதிர்ச்சியடைந்தார். விஜயிடம் தனது பெயர் ராமு என்று தெரிவித்தார். உடனே விஜய், “ராமுவுக்கு வாக்களியுங்கள்” என்று திருத்திக் கூறினார்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 5) பாஜக நிர்வாகி குஷ்பூ புதுச்சேரியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் போட்டியிடாதது குறித்த கேள்விக்கு, “அது கட்சித் தலைமை எடுத்த முடிவு. அதைப் பற்றி நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. ஒரு கட்சியில் இருக்கும்போது தனிப்பட்ட முறையில் கருத்து சொல்லக் கூடாது” என்றார்.
மேலும், “தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பியிருந்தால், இன்று புதுச்சேரியில் உங்கள் முன் உட்கார்ந்திருக்க முடியாது. எனது கணவர் மதுரையில் போட்டியிடுகிறார். நான் புதுச்சேரி, காரைக்கால், தமிழ்நாடு, கேரளா என பல இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். போட்டியிட்டால் இதைச் செய்ய முடியாது” என்றும் குஷ்பூ கூறினார்.
விஜய், “குழம்பிப்போன கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது” என்று விமர்சித்தது குறித்து கேட்டதற்கு, குஷ்பூ, “நேற்றுதான் வந்திருக்கிறார். விட்டுடுங்க பாவம்… அரசியல் தெரிந்தவர்கள் பற்றி நாம் விமர்சிக்கலாம். ஆனால் அவர் நேற்று தான் வந்திருக்கிறார். அவர் நேற்று ஒரு இடத்தில் வந்து, எங்கள் கட்சி வேட்பாளர் பெயரை சொல்லி விட்டு போய்விட்டார் இல்லையா? அப்படி என்றால் விஜய் மனதில் பாஜக இருக்கிறது. அது மட்டும் உறுதியாக உள்ளது. ஆமாம் நேற்று மணவெளி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செல்வம் சார் பெயரை தானே சொல்லிவிட்டுப் போனார். அதுவரை எங்களுக்கு சந்தோஷம்” என்று பதிலளித்தார்.
