உங்களைப் போல 100 பேரை வெற்றி பெற்ற கலைஞரின் மகள் – எடப்பாடிக்கு கனிமொழி பதிலடி!

Published On:

| By Pandeeswari Gurusamy

kanimozhi

திருச்சுழி தொகுதியில் கனி மொழி எம்.பி நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசுவை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி சிறை சென்றது குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நீங்கள் மிரட்ட மிரட்ட இன்னும் அதிகமாக பேசுவேன் என காட்டமாக தெரிவித்தார்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக் கொண்டு, இங்கே நம்மைப் பார்த்து குறைகளைச் சொல்லி விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நன்றாகத் தெரிந்துவிட்டது.அவருடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து நாம் காப்பி அடித்துவிட்டோம் என்று அடிக்கடி சொல்கிறார். நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். காப்பி அடிப்பது சரி என்று சொல்லவில்லை. ஆனால் காப்பி அடித்தாலும் பாஸ் பண்ணும் பிள்ளைகளைப் பார்த்துத்தானே காப்பி அடிக்க வேண்டும்? நீங்கள் தேறுவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட பிள்ளைகளைப் பார்த்து யாராவது காப்பி அடிப்பார்களா? நீங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் ‘நாங்கள் காப்பி அடிக்கிறோம்’ என்று சொல்கிறார். எத்தனையோ விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT

அவருக்கு முதலில் தேர்தல் பயம் வந்தது. பிறகு தேர்தல் ஜுரம் வந்தது. இப்போது ஜன்னியே வந்துவிட்டது. அதனால் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. ஒரு முதலமைச்சராக இருந்தவர், இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர் என்பதை மறந்துவிட்டு, தன்னுடைய தரம் என்ன என்பது அவருக்கே தெரியாமல் மிக மோசமாக விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்கிறேன் என்பதற்காக, என்னைப் பார்த்து “நீங்கள் மறுபடியும் ஜெயிலுக்கு போய்விடுவீர்கள்” என்று சொல்கிறார். நான் எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என் மீது பொய் வழக்கு போடப்பட்டது உண்மை. அந்த வழக்கை எதிர்கொண்டு, என் மீது குற்றம் இல்லை என்று சொல்லி விடுதலை செய்யப்பட்டு, இன்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். நான் நினைத்தால் என்னை வீணாகச் சிறையில் வைத்தவர்கள் மீது வழக்கு போட முடியும். ஆனால் குற்றம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டவள் நான். வழக்கு எல்லாம் நிலுவையில் இல்லை. மேல்முறையீட்டில் தான் உள்ளது. அதற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது.

ADVERTISEMENT

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப் போனவர்கள் யார் என்று அவருக்கு தெரிந்தால் சரி. அவர் மீதும் நிறைய வழக்குகள் இருக்கின்றன. அதையும் அவர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

என்னைப் பார்த்து “நீங்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் மறுபடியும் ஜெயிலுக்கு போக வேண்டும்” என்று சொல்கிறார். நான் கேட்கிறேன.. உங்களை எதிர்த்துப் பேசினால் சிறைக்குப் போக வேண்டும் என்று மிரட்டுகிறீர்களா? இதைத்தான் பாஜக செய்து கொண்டிருக்கிறது. பாஜக அவர்களை எதிர்த்துப் பேசக்கூடிய எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்கள் மீது சிபிஐ, வருமானவரி, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து வழக்குகளை ஏவிவிட்டுக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதனால்தான் சொல்கிறோம் – அண்ணா திமுகவை அமித்ஷா திமுகவாக ஆக்கிவிட்டீர்கள் என்று.

ADVERTISEMENT

அவர் என்னைப் பார்த்து “இப்படியே பேசிக் கொண்டிருந்தால் மறுபடியும் ஜெயிலுக்குப் போக வேண்டும்” என்று சொல்கிறார். நான் ஒன்றே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் மகள். இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சக்கூடியவள் நான் இல்லை. பெண்ணென்று நினைத்து, நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துவிடாதீர்கள். உங்களைப் போல 100 பேரை வெற்றி பெற்ற தலைவர் கலைஞரின் மகள் நான். தந்தை பெரியாரின் பாசறையில் என்னை இணைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கக்கூடிய ஒருவர் நான்.அதனால், தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் வந்திருக்கக்கூடிய எனக்கு இந்த மிரட்டல் எல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் மிரட்ட மிரட்ட, இன்னும் அதிகமாகப் பேசுவேன். இன்னும் அதிகமாக எதிர்ப்பேன். அதனால் என்னை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்காதீர்கள்.

தப்பான ஆளைப் பார்த்து தப்பான விஷயங்களைப் பேசாதீர்கள்.இந்த எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்னால் நமது முதலமைச்சரைப் பார்த்து மிகவும் தரக்குறைவாகப் பேசினார். அதை மீண்டும் கூட நான் சொல்ல விரும்பவில்லை.இப்படி தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்களை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு தைரியம் இல்லாமல், விமர்சனங்களைச் செய்து கொண்டிருக்கக்கூடிய அவருக்கு வரக்கூடிய இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share