எடப்பாடி நல்ல மனநல மருத்துவரை பார்த்து பரிசோதித்து கொள்வது நல்லது – கனிமொழி என்.வி.என்.சோமு ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

kani

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி, நல்ல மனநல மருத்துவரைப் பார்த்து பரிசோதித்துக் கொள்வது நல்லது என கனிமொழி என்.வி.என்.சோமு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஆதரித்துப் பேசினார்.

ADVERTISEMENT

அப்போது, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி குறித்து பேசிய அவர், “திமுகவில் கனிமொழிக்கு வேலை இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நான் ஏற்கனவே 195 சட்டமன்றத் தொகுதிகளில் நேரடியாக மக்களைச் சந்தித்து எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மக்களுடைய செல்வாக்கை இழந்துவிட்டதால் திமுக பதறுகிறது. தோல்வி ஜுரம் திமுகவை ஒட்டிக்கொண்டுள்ளது. கனிமொழி என்னைப் பற்றி நிறைய பேசியுள்ளார். அவரைப் பற்றி ஏன் பேச வேண்டும்? செல்லாத காசைப் பேசி என்ன பிரயோஜனம்? அந்தக் கட்சியிலேயே அந்த அம்மாவுக்கு வேலை இல்லை. அந்தக் கட்சியில் அவரை யாராவது வைத்திருக்கிறார்களா?” என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி என்விஎன் சோமு ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கனிமொழி சோமு பேசுகையில்,“நேற்று எடப்பாடி பழனிசாமி, கனிமொழி கருணாநிதியைப் பற்றி மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளார். கடந்த ஒரு வார காலமாக இது ஒரு பழக்கமான விஷயமாக உள்ளது. முதலில் துணை முதலமைச்சரை ‘பால்டாய்’ என்று தெரிவித்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலினை ‘கொரோனா காலத்தில் போய்ச் சேர்ந்திருப்பார்’ என்று தரம் தாழ்ந்து பேசினார். நேற்று ஒரு பெண் என்ற மாண்பைக்கூட பார்க்காமல், கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை மிகவும் தரம் தாழ்த்தி பேசியிருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தோல்வி பயத்தின் உச்சத்திற்கு எடப்பாடி போயுள்ளார். தேர்தலுக்குப் பின் இரண்டாவது இடம் கூட கிடைக்காது, மூன்றாவது இடத்திற்குப் போய்விடுவோம் என்ற பயத்தின் காரணமாக இதுபோன்ற தரம் கெட்ட வார்த்தைகளைப் பேசுகிறார். இது அவருக்கு மட்டும் பழக்கப்பட்ட விஷயம் அல்ல. அவரது கட்சியைச் சேர்ந்த சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்றோர் தொடர்ச்சியாக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசி வருகின்றனர்.

ADVERTISEMENT

தேர்தல் களத்தில் எதைப் பேச வேண்டும் என்ற வரம்பு உள்ளது. எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு நேரத்தில் ஒரிரு வார்த்தைகள் பேசுவது சில சமயங்களில் நடக்கக்கூடிய விஷயம். அதற்குப் பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் மாண்பான செயலாக இருக்கும்.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்திருந்தால், இப்படி நிச்சயமாகப் பேசியிருக்க மாட்டார். காலில் தவழ்ந்து தவழ்ந்து முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இப்படித்தான் பேசுவார் என்பதை எதிர்பார்க்க முடியும். அவருக்கு ஒரிஜினல் அரசியல் தெரியாது. அவர் பொது வாழ்வில் மக்களை, பெண்களை எதிர்கொண்டது கிடையாது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். இதற்கு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி, நல்ல மனநல மருத்துவரைப் பார்த்து பரிசோதித்துக் கொள்வது நல்லது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share