கடந்த சில வாரங்களாக மலையாள சினிமாவுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் பெருமையைக் கல்யாணி பிரியதர்ஷன் பேசி வந்தது ‘வைரல்’ ஆனது. “அவர் என் பெஸ்ட் ப்ரெண்ட் இல்ல; ஆனா, அதுக்கும் மேல’ என்கிற ரேஞ்சில் துல்கரைப் புகழ்ந்திருந்தார் கல்யாணி.
முதல் படத்தில் நடித்தபிறகு, பல நேரங்களில் தனது சினிமா வாய்ப்புகள், பங்களிப்புகள் பற்றி அவரிடம் ஆலோசனைகள் கேட்பதாகச் சொல்லியிருந்தார். இப்போது, துல்கரும் அவரைப் பதிலுக்குப் புகழ்வதற்கான சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது.
துல்கர் சல்மான் தயாரிப்பில், ஓணம் வெளியீடாக வந்திருக்கிறது ‘லோஹா சேஃப்டர் 1: சந்திரா’. பேண்டஸி த்ரில்லர் ட்ராமா வகைமையில் அமைந்துள்ள இப்படத்தினை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ புகழ் நஸ்லென் இதில் நாயகனாக நடித்துள்ளார். இன்னும் டான்ஸ்மாஸ்டர் சாண்டி, சந்து சலீம்குமார், அருண் குரியன், நிஷாந்த் சாகர், விஜயராகவன் என்று பலர் இடம்பெற்றுள்ளனர்.

மோகன்லாலின் ‘ஹ்ருதயபூர்வம்’, பகத்பாசிலின் ‘ஓடும் குதிரா சாடும் குதிரா’ மற்றும் ஹ்ருது ஹாரூண் – ப்ரீத்தி முகுந்தனின் ‘மைனே பியார் கியா’ ஆகியனவும் கடந்த வாரம் வெளியாகின. ஆனால், அதில் ஜாக்பாட்டை அடித்திருக்கிறது துல்கர் சல்மானின் தயாரிப்பு.
‘பேண்டஸி மூவி சீரிஸ்’ஸூக்கான விதை விழுந்துவிட்டதாக மகிழ்ச்சியில் இருக்கின்றனர் மலையாள சினிமா ரசிகர்கள். அந்தளவுக்கு அவர்களைக் கிறுகிறுக்க வைத்திருக்கிறது இப்படம். அதனால், இதற்கான தியேட்டர்கள் எண்ணிக்கை இரண்டே நாளில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாகி நான்காம் நாளான நேற்று, கேரளா முழுவதும் பல தியேட்டர்களில் இப்படம் காலை 6 மணிக்குத் திரையிடப்பட்டிருக்கிறது.
மலையாளத் திரையுலகில் இதற்கு முன் இப்படி நிகழ்ந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால், இது ஒரு சாதனையாக நோக்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கிலும் ‘டப்’ செய்து வெளியிடப்பட்டுள்ள இப்படம் கடந்த 4 நாட்களில் உலகம் முழுவதும் 65 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.