ஒரு திரைப்படம் குறித்து பேச்சுகள் நடக்கும்போது தொடங்கி அது திரையிடத் தயாராகும் வரை தொடர்ந்து ‘அப்டேட்’கள் தருவது ஒரு வகை. அதற்கு மாறாக, எந்தச் சத்தமும் இன்றி முழுதாகத் தயாராகித் திடீரென்று ‘இதோ வந்துட்டேன்’ என்று ரிலீஸ் ரேஸில் குதிப்பது இன்னொரு வகை. அந்த இரண்டாவது வகையில் சேர்ந்திருக்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’. இதில் பிரதான பாத்திரம் ஏற்றிருக்கிறார் காளி வெங்கட். kaali venkat madras matinee clash kamal thug life
ஓராண்டில் சுமார் பத்து படங்களில் காளி வெங்கட் நடிக்கிறார் என்றால், ஒவ்வொன்றிலும் அவரது பாத்திரம் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். மேம்போக்காகப் பார்த்தால் நாயகனோடு திரியும் நண்பனாக, கதையின் ஒரு அங்கமாகத் தெரிந்தாலும், படம் முழுக்க நாம் சந்திக்கிற ஒரு யதார்த்த மனிதராகத் தோன்றுவது அவரது சிறப்பு.
ஒரு காம்பவுண்ட் வீடு, அதன் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள், ஆட்டோ, கட்டி முடித்து மூடி வைக்கப்பட்ட சிலை, இவற்றோடு மூத்திரம் பேயும் ஒரு நாய் இருப்பதாகக் காட்டியது பர்ஸ்ட் லுக். அவற்றோடு நடுநாயகமாக ஒரு பதின்ம வயதுச் சிறுவன் நேராக நம்மைப் பார்ப்பதாக இது வடிவமைக்கப்பட்டிருந்தது. இது கவனிப்பையும் பெற்றது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் வழங்குகிற இப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்ச்ர்ஸ் தயாரித்திருக்கிறது. சத்யராஜ் கௌரவ வேடத்தில் நடிக்கிற இப்படத்தில் மலையாள நடிகை ஷெல்லி, ரோஷினி ஹரிப்ரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், சாம்ஸ், கீதா பாலகைலாசம், விஜய் டிவி ராமர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
‘சூப்பர்சிங்கர்’ புகழ் கே.சி.பாலசாரங்கன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்திற்காக வடிவேலு பாடிய ‘என்னடா பொழப்பு இது’ சிங்கிள் சமீபத்தில் வெளியானது. அறுபதுகளில் வந்த திரையிசைப் பாடல் பாணியில் அமைந்த இப்பாடலில், நடுத்தரக் குடும்பத்து மனிதனொருவனின் புலம்பலை ஆங்கிலம் கலந்து சொல்வதாக வரிகளை அமைத்திருக்கிறார் சினேகன். இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
வரும் ஜுன் 6ஆம் தேதி ‘மெட்ராஸ் மேட்னி’ தியேட்டரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கமல்ஹாசன் சிம்புவின் தக்லைஃப் திரைப்படம் வரும் ஜுன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘டூரிஸ்ட் பேமிலி’ பாணியில் நகைச்சுவை கலந்த குடும்பச்சித்திரமாக மெட்ராஸ் மேட்னி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘என்னடா பொழப்பு இது’ பாடல் வீடியோ.
’ராஜா மந்திரி’ படத்திலேயே கதை நாயகனாக நடிக்கத் தொடங்கிவிட்ட காளி வெங்கட் பின்னர் ’ஹர்ஹரா’, ‘தோனிமா’ படங்களில் முதன்மைப் பாத்திரத்தில் தோன்றினார். அந்த வரிசையில் ‘மைல்கல்’லாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’.
நம்மைத் திரையோடு ஒன்றச் செய்கிற நடிப்புத்திறமை கொண்ட கலைஞர்களில் ஒருவரான காளி வெங்கட், சாதாரண மனிதர்களை நாயகர்களாகக் காட்டுகிற படங்களில் இடம்பிடிப்பது புதிய திரையனுபவங்களைத் தரும் தானே..?!