மே 4-ம் தேதிக்குப் பிறகு நிச்சயம் மீண்டும் ஸ்டாலினின் இரண்டாவது ஆட்சிதான் அமையும். ஜோதிடங்களைப் பொய்யாக்குவார் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இன்று (ஏப்ரல் 11) செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் பேசுகையில்,“தமிழகம் முழுவதும் நான் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் வாயிலாக, அடுத்து வரப்போவது ஸ்டாலின் ஆட்சிதான் என்று மக்கள் தெளிவாகத் திட்டமிட்டிருப்பதை காண முடிந்தது. மத்திய அரசு எத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தைச் செய்தாலும், எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும், எந்தவிதமான வியூகங்களை அமைத்தாலும், மே 4-ம் தேதிக்குப் பிறகு நிச்சயம் மீண்டும் ஸ்டாலினின் இரண்டாவது ஆட்சிதான் அமையும். ஜோதிடங்களைப் பொய்யாக்குவார். இடையில் அவர்கள் என்ன வேலைகளில் வேண்டுமானாலும் இறங்குவார்கள்.
உறுதியாகத் தோல்வியை எதிர்நோக்கி இருப்பதை அவர்களே தெரிந்து கொண்டனர். ஆகவேதான் மோடி இதில் மிகுந்த அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
அது மட்டுமல்ல, தங்களுக்கு வேறு வழியில்லை என்பதால், பாஜக தொகுதிகூட கொடுக்காத ஒரு அண்ணாமலையை, ‘தொகுதி வரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஹெலிகாப்டராவது வந்தது’ என்ற அளவில் ஆக்கியுள்ளனர்” என்றார்.
உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க திமுக மாற்ற முயல்கிறது என்ற மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட என்டிஏ கூட்டணியினரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வீரமணி,“அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலவரம் தெரியாது. அவர்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யச் சொல்கிறார்களே தவிர, ஒவ்வொரு முறை தேர்தலிலும் இதுபோன்ற அனுபவம்தான் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தமிழ்நாடு தெரியாது. தமிழ்நாட்டின் உணர்வும் புரியாது.
அதனால் அவர்களது இந்த ஆட்டம் எல்லாம் வரும் 21-ம் தேதி வரைதான் இருக்கும். பிறகு அவர்களது கதை என்ன என்பது தெளிவாகத் தெரியும்.இவர்களுக்கு அவரைத் தெரியாது. அவர்களுக்கு இவரைத் தெரியாது. மக்களுக்கு இவர்கள் யாரையும் தெரியாது” என்றார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,“2029-க்குப் பிறகுதான் வரும் என்று சொன்னவர்கள், தேர்தல் நெருங்கும் காரணத்தால் பெண்களை ஏமாற்றும் நோக்கில் பிரதமர் இத்தகைய வாக்குறுதிகளை அளித்து வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வீரமணி,“இளைஞர்கள் மின்சாரத்தை நம்பி போகவேண்டுமே தவிர மின்மினிப்பூச்சிகளை நம்பி போக கூடாது.. மின்மினிப்பூச்சிகளால் இருட்டை தடுக்கமுடியாது. மின்சாரத்தால்தான் இருட்டை தடுக்க முடியும்” என்று மறைமுகமாக விமர்சித்தார்.
