கோவையில், நடிகர் விஜய் நடித்த “ஜனநாயகன்” திரைப்படத்தை சட்டவிரோதமாக திரையிட்ட உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” அவரது கடைசி திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்சார் பிரச்சனையால் இதுவரை வெளியாகவில்லை.
சில தினங்களுக்கு முன்பு படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகியதைத் தொடர்ந்து, முழு திரைப்படமும் இணையத்தில் கசிந்து வெளியானது. இச்சம்பவம் தமிழ் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். மேலும், சட்டவிரோதமாக படத்தைப் பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான “ஜனநாயகன்” திரைப்படத்தை கோவை கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் “ராசி பிரைம் மூவி” என்ற உள்ளூர் சேனலில் நேற்று (ஜனவரி 12) ஒளிபரப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் மோகனப்பிரியா என்பவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, தனியார் உள்ளூர் சேனல் உரிமையாளர் பழனிச்சாமியை (44) போலீசார் கைது செய்தனர். மேலும், கணினி, ஐந்து ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மத்திய தணிக்கை குழுவால் அனுமதி அளிக்கப்படாத ஜனநாயகன் படத்தை வெளியிட்ட ராசி டிவி சேனலின் நிறுவன அலுவலகம் அதிகாரப்பூர்வமாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பழனிச்சாமி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
