உதயசங்கரன் பாடகலிங்கம்
இன்னொரு ‘அவதாரம்’!?
’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா.
’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது?
கல்யாணத்திற்கு கல்யாணம்!
அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது.
விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை. தெருக்கூத்தின் மீது கல்யாணத்திற்கு ஆர்வம் வரக் காரணம் அவரது தந்தை இளவரசன் (ஸ்ரீ கிருஷ்ண தயாள்).
சில ஆண்டுகளுக்கு முன்னர், தற்செயலாக கூத்து பார்க்கச் சென்ற அவர் அதில் ஆர்வம் கொண்டார். அம்பலவாணன் என்பவரது தெருக்கூத்துக் குழுவில் சின்னச் சின்னதாய் வேலைகள் செய்யத் தொடங்கி ஒருநாள் ‘ராஜபார்ட்’ வேடமிடும் அளவுக்கு வளர்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, தான் வசித்துவரும் கிராமத்தில் நண்பன் தாண்டவம் (சேத்தன்) உடன் இணைந்து ஒரு குழுவைத் தொடங்குகிறார்.
தெருக்கூத்து ஆடும் கலைஞர்கள் எவ்வாறு கோயில் திருவிழா நிகழ்வுகளோடு இணைந்திருப்பதைக் கண்ட அனுபவங்களின் வழியே, அதே நடைமுறையைத் தனது ஊரிலும் கொண்டு வருகிறார் இளவரசன்.
ஒருகட்டத்தில் இளவரசன் தனது மகன் கல்யாணத்தைக் தெருக்கூத்துக்குள் கொண்டு வர முயல்கிறார். அது, குழுவின் வாத்தியார் ஆக நினைக்கும் தாண்டவத்தின் கனவைச் சுக்குநூறாக்குகிறது.
அன்று முதல் இளவரசனுக்கும் தாண்டவத்திற்கும் இடையே முரண் முளைக்கிறது. அது வளர்ந்து பெரிதாகி, இளவரசனைக் குழுவில் இருந்து விலக்கும் அளவுக்குச் செல்கிறார் தாண்டவம்.
அந்தக் கவலையிலேயே மது போதைக்கு அடிமையாகி இறந்து போகிறார் இளவரசன். இறக்கும் தருவாயில், மகன் கல்யாணம் அர்ஜுன வேடம் இட வேண்டும் என்பது மட்டுமே அவரது ஆசையாக இருக்கிறது.
தந்தையின் எண்ணத்தைச் செயல்படுத்த, அதே தாண்டவத்திடம் சீடனாகச் சேர்கிறார் கல்யாணம். ஆனால், அவருக்கு திரௌபதி, குந்தி, சந்திரமதி என்று பெண் வேடங்களையே கொடுக்கிறார் தாண்டவம்.
அதனால், கல்யாணத்தின் நடை, உடை, பாவனைகளில் பெண் தன்மை ஒட்டிக்கொள்வதாகக் கவலை கொள்கிறார் அவரது தாய். ஊரில் உள்ளவர்கள் பெண் கொடுக்கத் தயங்கும் நிலையிலும், தாண்டவத்தின் மகள் ஜெகதாம்பாள் (அம்மு அபிராமி) மட்டும் கல்யாணத்தின் பின்னாலேயே சுற்றி வருகிறார்.
ஆனால், கல்யாணமோ ‘அர்ஜுன வேஷம் கட்டுவதே தனது குறி’ என்று இருந்து வருகிறார். பதிலுக்கு ‘உன்னை என் அப்பன் வாழவும் விடமாட்டான், வளரவும் விடமாட்டான்’ என்கிறார் ஜெகதாம்பாள்.
இந்தக் கதை மேற்கொண்டு எந்த திசையில் நகர்ந்தது? ஜெகதாம்பாள் – கல்யாணம் இடையே திருமணம் நடந்ததா? கல்யாணத்திற்கு அர்ஜுனன் வேடம் தரத் தாண்டவம் சம்மதித்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
கல்யாணத்திற்குக் கல்யாணம் ஆகுமா என்ற கேள்வியோடு தொடங்குகிறது ‘ஜமா’ திரைக்கதை. அது பார்வையாளர்களைச் சிரிப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறது.
பிறகு, அர்ஜுனன் வேடத்தின் மீது கொண்டிருக்கும் வேட்கை, இளவரசன் மீதான தாண்டவத்தின் வன்மம் என்று திசை மாறி, இறுதியாக ‘ஜமா’ யார் வசம் என்ற இடத்தில் வந்து நிற்கிறது. படத்தில் காட்டப்படும் தெருக்கூத்து சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாகப் பார்க்கத் தயாராக இருந்தால் மட்டுமே பின்பாதி ஒருவருக்குப் பிடிக்கும்.
டைட்டிலில் உள்ள ‘ஜமா’ என்பதற்கு தெருக்கூத்தை ஆடும் குழு என்று அர்த்தம்.
ஒரு வாழ்வனுபவம்!
கல்யாணம் ஆக நடித்ததோடு, இப்படத்திற்கான எழுத்தாக்கம், இயக்கத்தையும் கையாண்டிருக்கிறார் பாரி இளவழகன்.
பெண் வேடத்திற்காக நீண்ட முடி வளர்த்து திரிவதுமாக இருப்பவர், பிளாஷ்பேக் காட்சிகளில் ‘கிராப்’ வெட்டியவாறு வருகிறார். கூத்தில் பெண் வேடமிட்டு வருகிறார். அடுத்தடுத்து அக்காட்சிகளைப் பார்க்கையில், ‘மூவரும் ஒரே ஆள்தானா’ என்ற சந்தேகம் எழுகிறது.
அம்மு அபிராமி இதில் ஜெகதாம்பாளாக வருகிறார். பாரி இளவழகனைக் காதலிப்பதாக வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் அழகாகத் தோன்றியிருக்கிறார்; சிறப்புற நடித்திருக்கிறார்.
’விடுதலை’க்குப் பிறகு ‘நெகட்டிவ்’ பாத்திரத்தில் கலக்கும் வாய்ப்பினை இதில் பெற்றிருக்கிறார் சேத்தன். கூத்தாடும் காட்சிகளுக்கும், சாதாரணமாகத் தோன்றுவதற்கும் கூத்தாடும் போது வெளிப்படுத்தும் பாவனைகளுக்கும் வேறுபாடு காட்டியிருக்கும் விதமே, அவரது நடிப்புத்திறன் என்னவென்பதை நிரூபிக்கிறது.
நாயகனின் தந்தையாகத் தோன்றியிருக்கும் ஸ்ரீ கிருஷ்ண தயாள், பின்பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் தனது நடிப்புத்திறன் எப்படிப்பட்டது என்று நிரூபித்திருக்கிறார்.
‘குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்’ காலம் தொட்டு நம்மை அவ்வப்போது ஆச்சர்யத்தில் வாழ்த்தி வரும் ‘அம்மா’ நடிகையான கேவிஎன் மணிமேகலை, இதில் நாயகனின் தாயாக வருகிறார். சேத்தன் வீட்டுக்கு திருமணப் பேச்சு நடத்தச் செல்லும் காட்சியில் அவரது நடிப்பு அபாரம்.
இவர்கள் தவிர்த்து பூனையாக வரும் வசந்த் மாரிமுத்து, சேத்தனின் மனைவியாக நடித்தவர், சம்பந்தியாக வருபவர் என்று பலர் நம் மனம் கவர்கின்றனர்.
கதை நிகழும் களத்தில் எங்கெல்லாம் வெளிச்சம் கொட்டிக் கிடக்கிறது, எங்கு இருள் பரவியிருக்கிறது என்று யோசிக்கவிடாத வகையில், காட்சிகளோடு நம்மை ஒன்றச் செய்கிறது கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு.
தெருக்கூத்து நிகழும் இடத்திற்கே சென்று வந்த அனுபவத்தைத் தர முனைந்துள்ளது கலை இயக்குனர் ஸ்ரீகாந்த் கோபால் குழு.
இப்படத்தின் ஒலி வடிவமைப்பினைக் கையாண்டிருக்கும் ஏ.எம்.செந்தமிழன், எஸ்.சதீஷ்குமார் இருவரும் அந்த அனுபவத்தை மேலும் ஒரு படி மேலுயர்த்துகின்றனர்.
படத்தொகுப்பாளர் பார்த்தா எம்.ஏ. வெறுமனே இயக்குனர் நினைத்த காட்சிகளைச் சிறப்புறத் தொகுத்தால் போதும் என்று செயல்பட்டிருக்கிறார்.
கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் காட்டும் ஒரு கதையில், பிளாஷ்பேக் காட்சியோடு இடைவேளை வருவது அபூர்வம். இதில் அதனை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர்.
இந்தக் கதையில் அம்மு அபிராமி – பாரி இளவழகன் காதல் என்னவானது என்பதைச் சொல்லுவதற்கும், இளவரசன் – தாண்டவம் இடையே எழும் மோதலைக் காட்டுவதற்கும் ‘பிளாஷ்பேக்’ உத்தியில் சில காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் நீளம் அதிகம். முடிந்தவரை இரு திருப்பங்களுக்கும் ஒரே பதிலைச் சொல்லும் வகையில் அக்காட்சிக்கோர்வையை வடிவமைத்திருக்கலாம்.
போலவே, அம்மு அபிராமி கல்லூரி செல்வதைப் பல ஆண்டு காலம் நிகழ்வதாகத் திரையில் காட்டியிருப்பது ‘லாஜிக்’ சார்ந்து சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
நாயகனிடம் அவரது தாய் தனது இறுதித்தருவாயில் என்ன சொன்னார் என்பதையும், கிளைமேக்ஸ் காட்சியையும் அடுத்தடுத்து காண்பிக்கும் இடம் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இப்படிப் படத்தொகுப்பாளர் கவனிக்க மறந்த பல இடங்கள் உண்டு. நேரம் கருதிச் சில காட்சிகளை ‘கட்’ செய்தது கூட அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.
ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ், டிஐ என்று பல அம்சங்கள் இப்படத்தில் மிகுந்த கவனத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னணி இசை இல்லாமல் ‘ஜமா’வைப் பார்த்தால் ‘நல்ல முயற்சிதான்.. ஆனா’ என்று இழுவையான பதிலே நம்மிடம் இருந்து வெளிவரும். அந்த இழுவையை ‘ஆஃப்’ செய்யும் வேலையைச் செவ்வனே செய்திருக்கிறது இளையராஜாவின் இசை. அவரது பங்களிப்பைப் பாராட்டிச் சலித்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு, நேர்த்தியானதொரு பணியை இதில் அவர் மேற்கொண்டிருக்கிறார்.
திரைக்கதையின் ஓட்டத்தைத் தணிக்கும் காட்சிகளிலும் கூட, அவரது இசை செய்திருக்கும் மாயாஜாலத்தை நம்மால் அளவிடவே முடியாது.
கமர்ஷியல் அம்சங்கள் குறைவு!
சிறு வயதில் தன் குடும்பத்தினர் தெருக்கூத்துக் கலையோடு கொண்ட தொடர்பை நேரில் பார்த்த அனுபவங்கள், பாரி இளவழகன் இப்படத்தை இயக்கக் காரணமாக உள்ளது.
முன்பாதியில் நாயகனுக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்ற கேள்விக்கு, ‘பெண் வேடங்களைக் கூத்தில் ஏற்று நடித்ததால் அவரிடத்தில் பெண்ணுக்கான உடல்மொழி தொற்றிவிட்டது’ என்ற பதில் சொல்லப்படுகிறது. அது சம்பந்தப்பட்ட சில காட்சிகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
அதிலொரு காட்சியில், ‘பொம்பளைங்க தான் சமைக்கணும், நல்லா புடவை கட்ட தெரிஞ்சிருக்கணும்னு பொம்பளைங்களே நினைக்கற வரைக்கும் என் கூட்டாளிக்கு கல்யாணம் நடக்காது’ என்றொரு வசனம் வரும்.
அதே போல, ‘யார் ஆம்பளை’ என்ற கேள்வியை எழுப்பும் நாயகி அதற்குத் தானே பதிலும் சொல்வதாக ஒரு காட்சி உண்டு. அது நம்மை நெகிழ வைக்கும்.
’நம்ம எதிரிங்க எல்லாம் அவனுக்கும் எதிரி ஆகணும்னு அவசியம் கிடையாது’ என்று தனது மகனைக் காட்டி தந்தை பேசுவதாகவும் ஒரு வசனம் உண்டு. அது போன்ற இடங்கள் ‘ஜமா’வை வேறொரு உயரத்தில் ஏற்றி வைக்கின்றன.
இப்படத்தில் தெருக்கூத்தை மையப்படுத்துகிற காட்சிகள் அதிகம். வடமாவட்டங்களில் இருக்கிற அளவுக்குத் தென்மாவட்ட மக்களுக்கு அவை பரிச்சயம் கிடையாது எனும் காரணத்தால், ’கமர்ஷியல் அம்சங்கள் இப்படத்தில் குறைவோ’ எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதாக, தெருக்கூத்து சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளன.
எத்தனை முறை அவமானப்படுத்தினாலும், துயரங்களை எதிர்கொண்டாலும், ‘ஜமா தான் முக்கியம்’ என்று நாயகன் நினைப்பதை ஏற்க மறுப்பதற்கும் அதுவே காரணமாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு.
நாசர் முதன்முறையாக இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் சிறப்புற உருவாக்கப்பட்டிருந்தாலும், அக்கதையில் கமர்ஷியல் அம்சங்கள் குறைவாக இருந்தது அக்காலகட்டத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. ரசிகர்கள் அதனைக் காணவிடாமல் செய்தது.
‘ஜமா’ அந்த தவறைச் செய்யவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். அதுவுமில்லாமல், இதுவரை காணாத உலகைத் திறம்படக் காண்பித்தால் போதுமென்ற திரைச்சூழல் தற்போது உள்ளது. அது, இப்படத்திற்கு உதவலாம். இதனைச் சொல்வதில் இருந்தே, வழக்கமான கமர்ஷியல் பட அனுபவத்தை எதிர்பார்த்து இப்படத்திற்குச் செல்லக்கூடாது என்பது பிடிபடும்.
அதேநேரத்தில், வழக்கத்திற்கு மாறான ஒரு காட்சியனுபவத்தை பெறத் தயாராக இருப்பவர்களுக்கு ‘ஜமா’ நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: புதிய மேயர்கள் யார்? ஸ்டாலின் போடும் கணக்கு!
ராமருக்கு வரலாறு கிடையாதா? சிவசங்கருக்கு அண்ணாமலை பதில்!
நெருங்கும் மழைக்காலம்… சாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் வேலு உத்தரவு!
வயநாடு நிலச்சரிவு: ரூ.20 லட்சம் வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா
வயநாடு மக்களுக்காக 100 வீடுகளை கட்டித்தருவோம் : ராகுல் உறுதி!