மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு சாலை பணிகளை முடித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கவிருப்பதால் மழைக்காலத்திற்கு முன்பாக நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தல் ஆகியவை குறித்து இன்று (ஆகஸ்ட் 2) அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை நடத்தினார்.
சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையப் பயிற்சி வளாகக் கூட்ட அரங்கில், நடைபெற்ற இந்த கூட்டத்தில், “மழைக்காலம் தொடங்கும் முன்னரே நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள், சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டிய பணிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்து அவற்றில் தங்கு தடையின்றி மழைநீர் வெளியேற வகை செய்ய வேண்டும்.
சாலைகளில் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சரி செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘நம்ம சாலை செயலி’ என்ற புதிய திட்டம் நெடுஞ்சாலைத் துறையில் தொடங்கப்பட்டு, சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சரி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பொறியாளர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
சாலைப் பாதுகாப்புப் பணிகள், குறிப்பாக ‘ரோடு மார்க்கிங் உரிய தரத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை மண்டலம் மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்று வரும் வெள்ளச் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
சாலையில் உள்ள மரங்களுக்கு கருப்பு-வெள்ளை வர்ணப்பட்டை அடித்தல், சாலைகளில் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகளை விரைவாக செய்து, விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சாலைகளிலும், சாலையின் எல்லை குறிக்கும் பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும்.
சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மறுசீரமைப்புப் பணிகளை உடனுக்குடன் முடித்து, ஒவ்வொரு பணிக்கும் தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெற வேண்டும்.
அகலப்படுத்தும் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட சாலையில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றியமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
அனைத்துப் பணிகளுக்கும் பணப்பட்டுவாடா செய்யும் முன் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலர்களைக் கொண்டு தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
அளவுப் புத்தகங்களை உதவிப் பொறியாளர்கள் மட்டுமே உடனுக்குடன் எழுத வேண்டும். தவறுகள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களிடம் சாலைகளை ஒப்படைத்த பின்னர், அச்சாலைகளில் ஏற்படும் சிறுபள்ளங்களை அவ்வபோது சீரமைக்க வேண்டும். பணி முடிக்கும் வரை பள்ளமில்லாச் சாலைகளாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஒப்பந்ததாரருக்கு உள்ளது. பாலப் பணிகளில் ஏற்படும் காலதாமதம் மற்றும் நிதிச் சுமையை தவிர்க்க வேண்டும்.
உரிய தள ஆய்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டு, முறையான மதிப்பீடு தயாரிக்க வேண்டும். நில எடுப்புப் பணிகள் மற்றும் சேவை சாதனங்களை மாற்றி அமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
ஒப்பந்தப் பணிகளில் முன்னேற்றம் இல்லாதபோது விளக்கம் கேட்பதுடன் ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் கால இலக்கு நிர்ணயித்து, அந்த காலக்கெடுவிற்குள் பணிகளை முடிக்க வேண்டும்” என்று அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு நிலச்சரிவு: ரூ.20 லட்சம் வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா
பியூட்டி டிப்ஸ்: நெற்றியில் கருமை… போக்குவது சுலபம்!
வயநாடு மக்களுக்காக 100 வீடுகளை கட்டித்தருவோம் : ராகுல் உறுதி!
மேகதாது அணை… பேச்சுவார்த்தை நடத்துவது தற்கொலைக்கு சமம் : துரைமுருகன்