ராமருக்கு வரலாறு கிடையாதா? சிவசங்கருக்கு அண்ணாமலை பதில்!

அரசியல்

ராமர் பிறந்ததற்கு வரலாறும் கிடையாது, ஆதாரமும் கிடையாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.

ராஜேந்திர சோழன் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஆடித் திருவாதிரை அரசு விழா இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “ராமருக்கு 3000 ஆண்டுகள் வரலாறு இருக்கிறது என்கிறார்கள். அது உண்மையல்ல. வரலாறே கிடையாது. ராஜேந்திர சோழன் வாழ்ந்ததற்கு அவர் கட்டிய கோயில்கள், குளங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், ஆதாரமாக இருக்கின்றன. அதை வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறோம்.

ராஜேந்திர சோழனுக்கு மூன்றாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனால், ராமர் இருந்ததற்கான வரலாறும் கிடையாது. ஆதாரமும் கிடையாது. ராமரை பற்றி சொன்னால் அவதாரம் என்பார்கள். அவதாரம் என்றால் பிறக்க முடியாது.
கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது.

நம்மை மயக்கி நமது வரலாற்றை மறைத்து வேறு ஒரு வரலாற்றை உயர்த்திக் காட்டுவதற்காக இந்த செயலை எல்லாம் செய்கின்றனர்.

ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள்” என்று கூறினார்.

முன்னதாக புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “மகா விஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். இதில் அவர் எடுத்துக்கொண்ட முக்கியமான அவதாரம் ராம அவதாரம்.

ராமர் எந்த குலத்தில் பிறந்தார் என பார்ப்பது கிடையாது. அவர் அனைவருக்கு பொதுவானவர் என்றுதான் பார்க்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் தான். பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னோடியாக ராமரை நாங்கள் பார்க்கிறோம்.

சமூக நீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர். எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமர்” என்று பேசியிருந்தார்.

தற்போது அமைச்சர் சிவசங்கர் ராமருக்கு வரலாறே இல்லை என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சிவசங்கர் பேசிய வீடியோவை ஷேர் செய்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, “கடந்த வாரம், திமுகவின் சட்ட அமைச்சர் ராமர் சமூக நீதியின் போராளி. மதச்சார்பின்மையின் முன்னோடி, அனைவருக்கும் சமத்துவத்தை அறிவித்தவர் என்று தெரிவித்திருந்தார்.

May be an image of 6 people, temple and monument

இந்த வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சோழன் வரலாற்றை அழிக்கும் சூழ்ச்சி என குறிப்பிட்டதோடு ராமருக்கு வரலாறே இல்லை என்று கூறியிருக்கிறார்.

புதிய பாராளுமன்ற வளாகத்தில் சோழ வம்சத்தின் செங்கோலை  பிரதமர் மோடி நிறுவிய போது எதிர்த்தவர்கள் இவர்கள்தானே?

தமிழ்நாட்டின் வரலாறு 1967ல்தான் தொடங்கியது என்று நினைக்கும் ஒரு கட்சியான திமுக நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் மீது அன்பை வெளிப்படுத்தியிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது.

சிவசங்கர் தனது சக அமைச்சரிடம் இருந்து ராமரைப் பற்றி ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை கேட்டு கற்றுக்கொள்ள வேண்டும். இரு அமைச்சர்களும் கலந்தாலோசித்து ராமர் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நெருங்கும் மழைக்காலம்… சாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் வேலு உத்தரவு!

வயநாடு நிலச்சரிவு: ரூ.20 லட்சம் வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா

+1
1
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “ராமருக்கு வரலாறு கிடையாதா? சிவசங்கருக்கு அண்ணாமலை பதில்!

  1. 1. அவரு ராமரை ஓர் உதாரணமா சொன்னாரு; இவரு அவருக்கு வரலாறு என ஒன்றும் இல்லைனுதானே சொல்றாரு. மேலும் புரட்டு புராணங்களைக் காட்டி, நிசமான வரலாற்றை மறைக்காதீங்கனு சொல்றாரு. இதில் என்ன குற்றம், வேறுபாடுனு சொல்லுங்க, அண்ணாமலைஜி
    2. நாடாளுமன்றத்தில வச்ச செங்கோல், உண்மையில ராஜ பரம்பரைகிட்ட இருந்து வந்ததானு சொல்லுங்கஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *