தமிழகம் முழுவதும் உள்ள பல ஜவுளி கடைகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் ஜவுளி கடைகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது தஞ்சை புதுக்கோட்டை ராமநாதபுரம் கடலூரில் உள்ள ஆனந்தம் ஜவுளிக் கடைகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள ஜவுளிக் கடைக்கு இன்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கடை திறந்த உடனேயே உள்ளே நுழைந்து கடையின் ஷட்டரை இழுத்து விட்டு சோதனையை தொடங்கினர். சோதனையின் போது அக்கடையின் முன்பாக துணை ராணுவப்படை அதிகாரிகள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அதேபோல் சிவன் கோயில் தெருவில் உள்ள ஆனந்தம் உரிமையாளர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது
இதேபோல் கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கிளைகள் செயல்பட்டு வருகிறது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள இந்த நிறுவனத்தின் கடையில், உணவகம் உள்ளிட்ட கடைகளும் இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவகுமார் மீது கடந்த 2022ம் ஆண்டு வருமான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனத்திற்கு சொந்தமான கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த வருமானவரித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு, கடையின் ஷட்டர்களை இழுத்து விட்டு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காந்திபுரம் சந்திப்பு பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆனந்தம் கடைகளில் சோதனை நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
