வங்காள மொழியை வங்கதேசத்தின் மொழி என டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி லோதி நகர் காவல்நிலையத்தில் இருந்து மேற்குவங்க காவல்துறைக்கு சமீபத்தில் அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில், ‘சில ஆவணங்களை வங்கதேச மொழியில் இருந்து மொழிபெயர்த்துள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது வங்காள மொழி என்பதற்கு பதிலாக வங்கதேச மொழி என குறிப்பிட்டிருந்தனர்.
இது மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ட்விட்டை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டார்.
வங்க மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பு!
அதில், “ஒன்றிய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையானது வங்காள மொழியினை ‘வங்கதேச மொழி’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது நம் தேசிய கீதம் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பாகும்.
இத்தகைய அறிக்கைகள் தெரியாமல் நிகழ்ந்த பிழையோ, தவறோ அல்ல. இந்தியாவின் பன்மைத்துவத்தைத் தொடர்ந்து சிறுமைப்படுத்தி, ஒருவரது அடையாளத்தைக் கொண்டு தாக்கும் ஆட்சியின் கோர மனநிலையையைத்தான் இவை அம்பலப்படுத்துகின்றன.
இந்தி அல்லாத மொழிகளின் மீது இத்தகைய தாக்குதல் தொடுக்கப்படும் நேரத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் மொழியையும் மக்களையும் காக்கும் அரணாகச் சகோதரி மம்தா பேனர்ஜி திகழ்கிறார். இந்தத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி தராமல் அவர் ஓயமாட்டார.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பிற்கு விரோதமானது!
முன்னதாக மம்தா பானர்ஜி வெளியிட்ட கண்டன அறிக்கையில், “ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் தாய்மொழியான வங்காள மொழி, நமது தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் (பங்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதியது) எழுதப்பட்ட மொழி, கோடிக்கணக்கான இந்தியர்கள் பேசும் மற்றும் எழுதும் மொழி, இந்திய அரசியலமைப்பால் புனிதப்படுத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழி, இப்போது வங்காள மொழி என்று விவரிக்கப்பட்டுள்ளது!
இது அவதூறான, அவமதிக்கும், தேச விரோத, அரசியலமைப்பிற்கு விரோதமானது! இது இந்தியாவின் அனைத்து வங்காள மொழி பேசும் மக்களையும் அவமதிக்கிறது. நம் அனைவரையும் இழிவுபடுத்தும் இந்த வகையான நடத்தையை நாம் ஏற்க முடியாது.
இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கவும், மேற்குவங்க மாநிலத்தை அவமானப்படுத்தவும் இதுபோன்ற அரசியலமைப்பு விரோத வழியை பயன்படுத்தும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக அனைவரிடமிருந்தும் உடனடியாக வலுவான எதிர்ப்புகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
