இந்தியாவை உலகளாவிய கைபேசி மையமாக (global mobile phone hub) மாற்றுவதற்கான முழுத் தயாரிப்புகளையும் அரசு செய்து வருகிறது. கைபேசி உற்பத்திக்கான இரண்டாவது உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை அரசு விரைவில் தொடங்க உள்ளது. நாட்டிலிருந்து கைபேசி ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக மே மாதத்திற்குள் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அரசாங்கம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5 பில்லியன் டாலர் (சுமார் 47,000 கோடி ரூபாய்) ஆகும்.
உள்நாட்டு கைபேசி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி (LSEM) திட்டம் 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போதைய மாற்று விகிதத்தின்படி, இத்திட்டத்தின் நிதி ஒதுக்கீடு ரூ. 40,995 கோடி ஆகும். LSEM பொதுவாக கைபேசிகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம் என்று அழைக்கப்ட்டது.
மே மாதம் வரும் திட்டம்:
கைபேசிகளுக்கான PLI 2.0 திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஏற்றுமதியை அதிகரிப்பதே இதன் முதன்மை நோக்கமாக இருக்கும் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன. இது மே மாதத்திற்குள் செயல்படுத்தப்படும். இதன் பட்ஜெட் 5 பில்லியன் டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் PLI திட்டம் தொடர்பாக நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பின்னர் இது இறுதி ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். இந்தியாவிலிருந்து மொபைல் போன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதே அரசின் இலக்கு. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட்டைப் பொறுத்தே பல காரணிகள் அமையும் என்று கூறப்படுகிறது.
மொபைல் போன்கள் ஏற்றுமதி:
கடந்த 2025ஆம் ஆண்டில் ரூ.2.62 லட்சம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தின் வெற்றியில் ஆப்பிள் நிறுவனம் முன்னணியில் இருந்தது. பிப்ரவரி மாதத்துக்குள், இத்திட்டத்தின் கீழ் மொத்த ஏற்றுமதி ரூ. 6.2 லட்சம் கோடியைத் தாண்டியது. இது ரூ. 4.87 லட்சம் கோடி என்ற இலக்கை விட 27 சதவீதம் அதிகமாகும். இத்திட்டம் 1.85 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. இது, இத்திட்டத்தின் கீழ் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற அரசின் இலக்கை விட 8 சதவீதம் குறைவாகும்.
