ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, தற்போது வழங்கப்படும் வெள்ளை நிற போர்வைக்குப் பதிலாக ராஜஸ்தானின் பாரம்பரிய ‘சங்கனேரி’ போர்வைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 23 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதில் சுமார் 30 லட்சம் முதல் 40 லட்சம் பயணிகள் ஏசி வகுப்பில் பயணம் செய்கின்றனர். அவர்கள் உறங்குவதற்காக வெள்ளை நிற போர்வை மற்றும் கருப்பு நிற கம்பளி வழங்கப்பட்டு வருகிறது.
எனினும் போர்வைகள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை என பயணிகள் நீண்டகாலமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் தரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி போர்வைகளின் சுகாதாரத்தை உறுதி செய்து, ஒவ்வொரு பயணிகளுக்கும் அவை சுத்தமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கடந்த 16ஆம் தேதி முதல் வெள்ளை நிற போர்வைக்குப் பதிலாக அச்சிடப்பட்ட ராஜஸ்தானின் பாரம்பரிய ‘சங்கனேரி’ போர்வைகளை வழங்கும் சோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள காத்திபுரா ரயில் நிலையத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அதன்படி ஜெய்ப்பூர் – அசார்வா (அகமதாபாத்) எக்ஸ்பிரஸ் ரயிலின் அனைத்து ஏசி வகுப்புகளிலும் சங்கனேரி போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “ரயில்வேயில் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவர எடுக்கும் முயற்சி ஆகும். ரயில்வேயில் போர்வைகள் பயன்பாடு எப்போதும் இருந்துள்ளது. ஆனால், அவற்றின் சுகாதாரம் குறித்து எப்போதும் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. அந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்காகவே, ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு முன்னோடித் திட்டமாக சங்கனேரி போர்வை உறைகள் வழங்கும் ஏற்பாடு தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனை முயற்சி வெற்றி அடைந்தால், இது நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களிலும் விரைவில் விரிவுபடுத்தப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சரி அதென்ன சங்கனேரி போர்வை?
சங்கனேரி போர்வை என்பது கையால் அச்சிடப்படும் ஒரு பாரம்பரிய நுட்பமாகும். இது பறவைகள், விலங்குகள், மென்மையான மலர், இயற்கையால் ஈர்க்கப்பட்ட மையக்கருத்துகள், நேர்த்தியான கோடுகள் மற்றும் சிக்கலான விவரங்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை வெள்ளை நிற துணியில் அச்சிடப்படுகிறது.
இந்த கைவினை 16 ஆம் நூற்றாண்டில் உருவானது. அன்றிலிருந்து ராஜஸ்தானி கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. சங்கனேரி பிரிண்ட் போர்வை மிகவும் சிறப்பு வாய்ந்தது. கைவினைஞர்கள் பல நூற்றாண்டுகள் பழமையான திறமையையும் விவரங்களுக்கு கவனத்தையும் பிரதிபலிக்கும் துடிப்பான சாயல்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்க காய்கறியால் தயாராகும் சாயங்களைப் பயன்படுத்துகின்றனர்.
தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட ஜவுளி பாரம்பரியத்தை வெளிப்படுத்த எதிர்காலத்தில் பிற மாநிலங்களிலிருந்து அச்சுகளை அறிமுகப்படுத்தவும் இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிகரமாக நிரூபணமாகும் என்றும், பயணிகள் விரைவில் இந்தியா முழுவதிலுமிருந்து வரும் பிராந்திய அச்சிட்டுகளை தங்கள் போர்வை உறைகளில் பார்ப்பார்கள் என்றும் நம்புகிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
