இந்தியாவில் சைபர் பாதுகாப்புத் துறையில் திறமையான நிபுணர்களை உருவாக்கும் நோக்கில், ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) மற்றும் ஐஐடி கான்பூர் (IIT Kanpur) இணைந்து நாட்டின் முதல் நடைமுறை சார்ந்த ‘பேச்சுலர் ஆஃப் சைபர் செக்யூரிட்டி (B.Cyber.) பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. 2026–27 கல்வியாண்டு முதல் தொடங்கும் இந்த நான்கு ஆண்டு இளநிலைப் படிப்புக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்தப் புதிய பட்டப்படிப்பு, நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்கள், டிஜிட்டல் பாதுகாப்பு சவால்கள் மற்றும் திறமையான சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் தேவையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், வங்கி, பாதுகாப்புத் துறை, தொலைத்தொடர்பு, சுகாதாரம் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடிய நிபுணர்களை உருவாக்குவதே இந்தப் படிப்பின் முக்கிய நோக்கமாகும்.
என்ன சிறப்பு?
இந்த B.Cyber. பட்டப்படிப்பு வழக்கமான வகுப்பறை கற்றலை மட்டும் மையமாகக் கொண்டதல்ல. கோட்பாட்டுப் பாடங்களுடன் இணைந்து ஆய்வகப் பயிற்சி, நடைமுறை சைபர் பாதுகாப்பு பயிற்சி மற்றும் தொழில்துறை அனுபவத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பின் முக்கிய அம்சமாக, இறுதி இரண்டு ஆண்டுகள் நேரடி களப்பணி (Field Deployment) இடம்பெறுகிறது. இதன்போது மாணவர்கள் உண்மையான சைபர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்படும்?
இந்தப் பாடத்திட்டத்தில்,
- Security Operations
- Vulnerability Assessment
- Penetration Testing
- Malware Analysis
- Cloud Security
- Hardware Security
- Secure Systems
- Critical Infrastructure Security
- Digital Forensics
- Applied Cryptography
உள்ளிட்ட நவீன சைபர் பாதுகாப்பு துறைகளில் ஆழமான பயிற்சி வழங்கப்பட உள்ளது. தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறும்?
2026ஆம் ஆண்டிற்கான முதல் மாணவர் சேர்க்கை ஐஐடி கான்பூர் ஏற்கனவே தொடங்கியுள்ள தேர்வு முறையுடன் இணைந்து நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஐஐடி மெட்ராஸ் அல்லது ஐஐடி கான்பூர் ஆகியவற்றில் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
சேர்க்கை நடைமுறை பொதுவாக இருந்தாலும், மாணவர்கள் தேர்வு செய்யும் கல்வி நிறுவனத்திலேயே முழுப் படிப்பையும் பயின்று, அந்தந்த ஐஐடியின் தனித்தனி பட்டத்தைப் பெறுவார்கள்.
ஜேஇஇ அட்வான்ஸ் கட்டாயமா?
இந்தப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை JEE Advanced மதிப்பெண் அடிப்படையில் நடைபெறாது. அதற்கு பதிலாக, JEE Main மதிப்பெண், சைபர் பாதுகாப்புத் துறையில் மாணவர்கள் மேற்கொண்டுள்ள முன்அனுபவம் அல்லது தனிப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முதற்கட்டத் தேர்வு நடைபெறும். அதன்பின் தேர்வானவர்கள் நேரடி மதிப்பீடு மற்றும் ஹேக்கத்தான் (Hackathon) போன்ற நடைமுறைத் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்?
இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு Cyber Defence, Security Operations Centre (SOC), Digital Forensics, Penetration Testing, Malware Research, Cloud Security, Hardware Security மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சைபர் பாதுகாப்பு அமைப்புகளில் பணியாற்றும் வாய்ப்புகள் உருவாகும் என கல்வி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், சைபர் பாதுகாப்பு மற்றும் கணினி அறிவியல் துறைகளில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை தொடர விரும்புவோருக்கும் இந்தப் பட்டப்படிப்பு வலுவான அடித்தளமாக அமையும்.
ஏன் இந்தப் படிப்பு முக்கியம்?
இந்தியாவில் தற்போது சுமார் 15 லட்சம் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பற்றாக்குறை இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் டிஜிட்டல் பாதுகாப்புக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய பட்டப்படிப்பு எதிர்கால தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறமையான மனித வளத்தை உருவாக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. கல்வியாளர்களின் பார்வையில், நடைமுறை அனுபவம், தொழில்துறை இணைப்பு மற்றும் முன்னேற்றமான பாடத்திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த B.Cyber. திட்டம், இந்தியாவில் சைபர் பாதுகாப்புக் கல்விக்கு புதிய திசையை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
