ஆக்ஷன் காட்சிகளுக்காக மட்டும்..!
இந்தியில் இந்த ஆண்டு வெளியான பெரிய நட்சத்திரங்களின் படங்கள், பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படங்கள், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்று எதுவும் போதிய வரவேற்பைப் பெறவில்லை. முன்னணி நட்சத்திரங்களாக, மூத்த கலைஞர்களாகத் திகழ்கிற அமீர்கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் படங்கள் இருநூறு கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்தாலும் முதலிரண்டு இடங்களை ச்சாவா மற்றும் சையாரா படங்களே பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில் பெரிய தயாரிப்பு நிறுவனம், வடக்கு மற்றும் தெற்கில் புகழ் பெற்றிருக்கும் இரண்டு நட்சத்திர நாயகர்கள், உளவாளி சாகசக் கதை, பிரமாண்ட பட்ஜெட்டில் ஆக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சிகள் என்று எதிர்பார்ப்பைப் பூதாகரமாக உருவாக்கியது ‘வார் 2’.
ஹ்ரித்திக் ரோஷன் உடன் ஜுனியர் என்.டி.ஆர். இணைந்துள்ள இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அனில் கபூர், அசுதோஷ் ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அயான் முகர்ஜி இதனை இயக்கியுள்ளார்.
சரி, ‘வார் 2’ தரும் திரையனுபவம் எத்தகையது?

‘எதிர்பார்த்த’ கதை!
ரா உளவுப் பிரிவில் பணியாற்றும் மேஜர் கபீர் தாலிவால் (ஹ்ரித்திக் ரோஷன்) எப்பேர்ப்பட்ட சாகசக்காரர் என்பதை ‘வார்’ முதல் பாகம் சொன்னது. இந்த படமும் அதையே திரும்பச் சொல்கிறது.
என்ன, இந்த இரண்டாம் பாகத்தில் அவரோடு நேருக்கு நேர் மோதுகிறார் மேஜர் விக்ரம் (ஜுனியர் என்.டி.ஆர்).
இருவரும் ஏன் மோதுகின்றனர் என்பதற்கான காரணம் ’பிளாஷ்பேக்’கில் சொல்லப்படுகிறது. வில்லன் தரப்புக்கு விக்ரம் ஏன் உதவுகிறார் என்கிற மர்மம் அதன் மூலமாக விலகுகிறது.
நாயகன் நாட்டைக் காப்பாற்ற முனையும்போது, அதனைத் தடுப்பது தானே வில்லன் வேலையாக இருக்க முடியும் அல்லது வில்லன்கள் நாச வேலைகளில் ஈடுபடுகிறபோது, அவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பதுதானே நாயகனின் வேலையாக இருக்க முடியும். அதுவே, ‘வார்2’விலும் நிகழ்கிறது.
சுமார் பட்ஜெட்டில் தயாராகிற ‘உளவாளி’ வகைமை திரைப்படம் எனும்போது உள்நாட்டில் வெவ்வேறு பெருநகரங்களுக்குப் பயணிப்பார்கள். அருகில் இருக்கும் நாடுகளுக்குச் செல்லலமா என்பதை நாயகன் யோசிக்க, பட்ஜெட் பெரும் தடையாக இருக்கும்.
இந்த படத்தில் ஸ்பெயின், பிரான்ஸ், சோமாலியா என்று பறக்கின்றனர் நாயகர்கள். பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாவதில் இருக்கிற சிறப்பம்சம் அதுதான்.
போலவே, படத்தின் சண்டைக்காட்சிகளும் பெரும் செலவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான விஎஃப்எக்ஸ் செலவும் கால அவகாசமும் நிறைய. அதுவே, இப்படத்தைச் சிறப்பானதாக உணரச் செய்கிறது.
இரண்டு நாயகர்கள் ஒருவரோடு ஒருவர் மோதுமிறபோது, ‘இப்படித்தான் கதை இருக்கும்’ என்று ஒரு எதிர்பார்ப்பு நமக்குள் எழும். அந்த ’எதிர்பார்ப்பு’ திரையில் பொய்த்துப் போகாமல் அப்படியே விரிகிறது.
ஒரு நாயகன் நாட்டுக்குத் துரோகம் செய்வதாக நடித்து அதனைக் காக்கப் போராடுகிறார்; இன்னொருவரோ, அதனைக் காப்பதாக நடித்து நாட்டிற்குத் தீங்கிழைப்பவர்களோடு கைகோர்த்து நிற்கிறார்.
இறுதியில் இருவரில் யார் வென்றார்கள் என்பதோடு படம் நிறைவடைகிறது. அதுவும் கூட நாம் எதிர்பார்த்த வகையிலேயே உள்ளது.
ஒரு உளவாளிக் கதையில் எதெல்லாம் ‘க்ளிஷே’ என்று கருதப்படுமோ, அவையனைத்தும் ‘வார் 2’வில் கொட்டிக் கிடக்கிறது.

கண்கவர் காட்சிகள்!
’வார்’ படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகமாகிவிட்டதால், இதில் ஜுனியர் என்.டி.ஆர். வருகை திரைக்கதையில் தாமதமாகக் காட்டப்பட்டுள்ளது.
இரண்டு ஹீரோக்களுக்கும் பில்டப் ஷாட்கள், மேனரிசம், ஸ்டைலிங் என்று அனைத்துமே விளம்பரப்பட பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. அது போகப் பல்வேறு நாடுகளில் உள்ள நகரங்கள், கலை வடிவமைப்புக் குழுவினரால் சிறப்பாக ஆக்கப்பட்ட கட்டடங்கள், விஎஃப்எக்ஸ் துணையோடு வார்க்கப்பட்ட கண்கவர் பிரேம்கள் என்று ஒவ்வொரு ஷாட்டும் கவனத்தைக் கவ்வுகிறது.
அந்த வகையில் இயக்குனர் அயன் முகர்ஜி திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பெஞ்சமின் ஜாஸ்பர், தயாரிப்பு வடிவமைப்பாளார்கள் ரஜத் பொட்டார், அம்ரிதா மஹால் நகாய், ஸ்டண்ட் இயக்குனர்கள் ஸ்பிரோ ரஸாடோஸ், ப்ரான்ஸ் ஸ்பில்ஹாஸ், அனல் அரசு, ஓ சீ யங், க்ரெய்க் மெக்ரே, சுனில் ரோட்ரிக்ஸ் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அதற்குத் துணை நின்றிருக்கிறது.
ப்ரீதம் இசையில் பாடல்கள் தியேட்டரில் நம்மை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்குபவை. திரும்பத் திரும்பக் கேட்டால் என்னவாகும் என்பது இனிதான் தெரியவரும்.

காட்சிகளில் இருக்கும் பரபரப்பை ரசிகர்களுக்கு மிகச்சரியாகக் கடத்துவது என்ற தீர்மானத்தோடு பின்னணி இசையை அமைத்திருக்கின்றனர் சஞ்சித் பல்ஹரா மற்றும் அங்கித் பல்ஹரா.
விமானத்தில் பயணம் செய்தபோது ‘டிஷ்யூ பேப்பர்’ போன்ற சிறிய காகிதத்தில் தான் இதன் கதையை ஆதித்யா சோப்ரா எழுதியிருக்க வேண்டும். திரைக்கதையில் ஆங்காங்கே ‘ஸ்டண்ட்’ காட்சிகளை பெரிதாக வடிவமைத்து, காட்சிகளுக்கும் கதாபாத்திரங்களுக்குமான சிறப்பம்சங்களைக் குறைவாகக் கொண்டிருப்பது அதையே உணர்த்துகிறது.
’இண்டியா இஸ் பர்ஸ்ட்’ என்பது போன்ற வசனங்களால் ரசிகர்களிடத்தில் எழுச்சியை உருவாக்க முனைந்திருக்கிறார் வசனகர்த்தா அப்பாஸ் டயர்வாலா. மூலத்திலேயே உயிர்ப்பு இல்லாததால், தமிழ் டப்பிங்கில் பெரிதாக ஈர்ப்பு ஏற்படவில்லை.
இது போன்ற படங்களைத் தயாரிக்கும் முன்னர் லியாகத் அலிகான் வசனத்தில் விஜயகாந்த் நடித்த படங்களை சப்டைட்டில் உடன் பார்த்திருந்தால் கொஞ்சம் பிரயோஜனமாக இருந்திருக்கும்.
இது போக ஒலி வடிவமைப்பு, டிஐ, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை என்று பல கலைஞர்கள் தங்கள் உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர்.
இந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜுனியர் என்.டி.ஆர் எப்படி நடித்திருக்கின்றனர் என்பதைத் தனியே விளக்கத் தேவையில்லை.
’ஜெய் லவ குசா’ படத்தின் மூன்று வேடங்களில் நடித்து தனது திறமையை என்றோ வெளிக்காட்டியவர் ஜுனியர் என்.டி.ஆர். அவருக்கு இப்படம் சோளப்பொரிதான். ஹ்ரித்திக் அதனை முன்கூட்டியே புரிந்துகொண்டு, தனது புஜ பலத்தை கேமிராவுக்கு காட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.
கியாரா அத்வானி இந்த படத்தில் எதற்கு? அதற்குப் பதில் சொல்லும்விதமாக, ஒரு பாடல் காட்சியில் பிகினியில் வந்து போயிருக்கிறார். அந்த கணத்தில் தியேட்டரில் விசில் பறக்கிறது. மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
’விக்ரம்’ பாதிப்பில் இதில் அனில் கபூருக்கு ஒரு ‘ஆக்ஷன் ப்ளாக்’ வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஹ்ரித்திக்கை சிறை பிடிக்கும் காட்சியில் வரும் ரேஷ்மா பாம்பேவாலா நொடிப்பொழுதில் நம் கவனம் ஈர்க்கிறார்.
இதுபோக அசுதோஷ் ராணா, வருண் படோலா, விஜய் விக்ரம் சிங், கே.சி.சங்கர், அரிஷ்டா மேத்தா எனப் பலர் உண்டு.
அடுத்து வரப் போகும் ‘ஆல்ஃபா’ படத்திற்கான முன்னோட்டமாக பாபி தியோலும் ஒரு ஷாட்டில் வந்து போயிருக்கிறார்.
இப்படிப் படம் முழுக்கப் பல தலைகள் தெரிந்தாலும், கிளைமேக்ஸ் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு வளைத்து அமைக்கப்பட்டிருந்தாலும், தியேட்டரை விட்டு வெளியே வருகையில் ‘பழைய படம்’ பார்த்த எண்ணமே மனதில் நிறைகிறது.
‘அது பரவாயில்ல’ என்பவர்கள், ஆக்ஷன் காட்சிகள் தரும் ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களுக்காக ‘வார் 2’வை ஒருமுறை பார்க்கலாம்..!