இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகும் ஸ்ரேயாஸ் ஐயர்… வழிவிடுவாரா ரோகித் சர்மா?

Published On:

| By christopher

Shreyas Iyer to be captain of Indian ODI team but

இந்திய ஒருநாள் அணி கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயரை நியமிக்க பிசிசிஐ விரும்புவதகாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2025 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் நடைபெற உள்ளது. சமீபத்தில் இத்தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனினும் சாம்பியன்ஸ் டிராபி, உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் என அனைத்து விதமான போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் சர்ச்சையானது.

2024–25 சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் அனேக முன்னணி பேட்ஸ்மேன்களை விஞ்சும் வகையில் 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 175) எடுத்து, பஞ்சாப்பை 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதுமட்டுமின்றி, துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா 12 வருடங்களுக்குப் பிறகு கோப்பை வெல்வதற்கு அதிக ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார்.

ADVERTISEMENT

இதனையடுத்து அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய அணி தேர்வுக்குழுவுக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ராபின் உத்தப்பா, முகமது அசாருதீன், முகமது கைஃப் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டன் பதவிக்கு பிசிசிஐ தரப்பில் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அடுத்த இரண்டாண்டுகளுக்கு இந்திய அணியின் சுற்றுப்பயணம் கடுமையாக உள்ள நிலையில், டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து வடிவத்திற்கும் ஒரே கேப்டனை நியமிக்க பிசிசிஐ விரும்பவில்லை.

சுப்மன் கில் தற்போது டெஸ்ட் அணிக்கும், சூர்ய குமார் யாதவ் டி20 அணிக்கும் கேப்டனாக உள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், ஆசியக் கோப்பைக்கு பிறகு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த முடிவு தற்போது ரோகித் சர்மாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 38 வயதான அவர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக உள்ளார். அவர் விலகும் பட்சத்தில் தான் ஸ்ரேயார் ஐயர் அணியின் நீண்டகால கேப்டனாக நியமிக்கப்படுவார். மேலும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவை அவரால் வழிநடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share