இணையத்தில் ஒருமுறை படம் வந்துவிட்டால் அதை அளிப்பதே முடியாது என்பது பழைய கதை. அனுமதியின்றிப் பகிரப்படும் ஆபாசப் படங்கள் (Non-consensual Explicit Images) அல்லது ‘ரிவெஞ்ச் பார்ன்’ (Revenge Porn) மூலம் பாதிக்கப்படும் பெண்களுக்கு, கூகுள் நிறுவனம் ஒரு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சை பரிசளித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அந்தரங்கப் புகைப்படங்களை கூகுள் தேடலிலிருந்து (Google Search update) மிக விரைவாகவும், எளிதாகவும் நீக்குவதற்கான ஒரு புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய அப்டேட் என்ன? முன்பெல்லாம் கூகுளில் வரும் ஒரு தகாத படத்தை நீக்க வேண்டும் என்றால், பல படிவங்களை நிரப்பி, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், புதிய அப்டேட்டின்படி, செயல்முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.
- நீங்கள் தேடலில் உங்கள் அந்தரங்கப் படத்தைப் பார்த்தால், அந்தப் படத்தின் மேலேயே இருக்கும் மூன்று புள்ளிகளை (Three Dots) கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் “Remove Result” (முடிவை நீக்கு) என்பதைத் தேர்ந்தெடுத்து, “It shows a sexual image of me” (இது என்னுடைய பாலியல் தொடர்பான படம்) என்ற காரணத்தைக் கொடுத்தால் போதும்.
ஏன் இது மிக முக்கியம்?
- மொத்தமாக நீக்கலாம் (Bulk Removal): முன்பு ஒவ்வொரு படமாகப் புகார் அளிக்க வேண்டும். இப்போது, ஒரே நேரத்தில் பல படங்களைத் தேர்ந்தெடுத்துப் புகார் அளிக்கலாம். இது பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும்.
- எதிர்காலப் பாதுகாப்பு: இந்தப் புகாரை அளிக்கும்போதே, “இதே போன்ற படங்கள் எதிர்காலத்தில் வந்தால் அதையும் காட்டுவதைத் தடு (Filter)” என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம். இதனால், மீண்டும் மீண்டும் அதே பிரச்சனை வராது.
டிராக்கிங் வசதி: நீங்கள் கொடுத்த புகார் என்ன ஆனது என்பதைத் தெரிந்துகொள்ள, “Results about you” (உங்களைப் பற்றிய முடிவுகள்) என்ற தனிப் பக்கத்தில் சென்று பார்க்கலாம். அங்கு உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதா என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
முக்கியமான விஷயம்: இந்த வசதி கூகுள் தேடல் முடிவுகளில் (Search Results) இருந்து மட்டுமே படங்களை நீக்கும். அந்தப் படம் பதிவேற்றப்பட்டிருக்கும் இணையதளத்திலிருந்து (Source Website) நீக்காது. இருப்பினும், கூகுளில் தேடினால் கிடைக்காது என்பதால், 90% பிரச்சனை தீர்ந்துவிடும்.
இந்திய அரசின் கெடுபிடி: இந்தியாவில் சமூக வலைதள விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், “அனுமதியின்றிப் பகிரப்படும் ஆபாசப் படங்களை 2 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்,” என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல கூகுளும் இந்தத் துரித நடவடிக்கையை எடுத்துள்ளது.
தொழில்நுட்பம் சில நேரங்களில் ஆபத்தானதாக இருந்தாலும், கூகுளின் இந்த நடவடிக்கை பெண்களுக்குக் கவசமாக மாறியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை!
