டெல்லியில் 9, லோக் கல்யாண் மார்க் என்ற முகவரியில் அமைந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் இல்ல வளாகப் பகுதியில் நேற்றிரவு (டிசம்பர் 30) ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஒன்பது தீயணைக்கும் வாகனங்கள் பிரதமர் இல்லத்தை நோக்கி விரைந்தன.
இதுகுறித்து பல்வேறு தகவல்கள் உலவியநிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.
“லோக் கல்யாண் மார்க் வளாகத்தில் 9 மணிக்கு ஒரு சிறிய தீ ஏற்பட்டது, ஷார்ட் சர்க்யூட் என்ற மின்கசிவு காரணமாக இது ஏற்பட்டது. இது பிரதமரின் குடியிருப்பு அல்லது அலுவலக பகுதியில் இல்லை. ஆனால், வளாகத்தின் SPG வரவேற்பு பகுதியில் இருந்தது. தீ இப்போது மிகவும் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்தது.
டெல்லி தீயணைப்பு சேவைகள் இயக்குநர் அதுல் கார்க் கூறுகையில், “பிரதமர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கு இரவு 7.30 மணிக்கு தீயணைப்பு அழைப்பு வந்தது. அதன்படி, நெறிமுறையின்படி, மூத்த அதிகாரியுடன் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்துக்கு விரைந்தனர். இருப்பினும், பிரதான வாயிலிலிருந்து தீயணைப்பு வண்டிகள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த அழைப்பு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. கிடைத்த தகவல்களின்படி, யுபிஎஸ்ஸில் ஒரு சிறிய தீ ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
