செயலற்ற பிஎஃப் கணக்குகளுக்கு பெரிய மாற்றம்
ஊழியர்கள் நல நிதி அமைப்பு (EPFO), நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் உள்ள பிஎஃப் (PF) கணக்குகளில் இருக்கும் பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் புதிய பைலட் (Pilot) திட்டத்தை தொடங்கியுள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை, ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் தொகைகளை மீண்டும் உரியவர்களுக்கு திருப்பி வழங்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
யாருக்கு இந்த திட்டம் பொருந்தும்?
இந்த திட்டம் முதற்கட்டமாக, 36 மாதங்களுக்கு மேல் செயல்பாடு இல்லாத பிஎஃப் கணக்குகள், ₹1,000 அல்லது அதற்கு குறைவான இருப்புத் தொகை கொண்ட கணக்குகள் என வரையறுக்கப்பட்ட கணக்குகளுக்கு மட்டும் அமல்படுத்தப்படுகிறது.
இந்த வகை கணக்குகள் “இன்ஒப்பரேட்டிவ்” அல்லது செயலற்ற கணக்குகள் என கருதப்படுகின்றன.
விண்ணப்பம் தேவையில்லை
இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் விண்ணப்பம் செய்ய தேவையில்லை, ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, பிஎஃப் தொகை நேரடியாக ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பதாகும்.
மேலும், கணக்குதாரர் உயிரில் இல்லாத நிலை ஏற்பட்டால், பதிவு செய்யப்பட்ட நாமினிக்கு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை பேருக்கு பயன்?
முதல் கட்டமாக, சுமார் 7.11 லட்சம் செயலற்ற கணக்குகள், மொத்தம் ₹30.52 கோடி தொகை நேரடியாக திருப்பி வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம், பல ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த சிறிய தொகைகள் மீண்டும் கணக்குதாரர்களிடம் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக தொகை இருந்தால் என்ன?
₹1,000ஐ விட அதிக தொகை உள்ள கணக்குகளுக்கு இந்த தானியங்கி திட்டம் பொருந்தாது. அத்தகையவர்களுக்கு வழக்கமான பிஎஃப் கிளெயிம் செயல்முறையை பின்பற்ற வேண்டும், கேஒய்சி மற்றும் யுஏஎன் விவரங்களை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஏன் இந்த மாற்றம்?
நாட்டில், லட்சக்கணக்கான செயலற்ற பிஎஃப் கணக்குகளில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பயன்பாடின்றி இருப்பதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதனை சரிசெய்யும் முயற்சியாக இந்த பைலட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
செயலற்ற பிஎஃப் கணக்குகளில் இருக்கும் பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் இந்த புதிய முயற்சி, லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிவாரணமாக அமையும். எதிர்காலத்தில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டால், பெரிய தொகைகளுக்கும் தானியங்கி திருப்பிச் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும் வாய்ப்பும் உள்ளது.
