எடப்பாடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் மாயமாகியிருக்கும் நிலையில் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,599 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
தற்போது வரை 1457 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு 601 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருவதால் வேட்பாளர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வருகை தருகின்றனர்.
அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தவெக வேட்பாளர் அருண்குமார் வருகை தந்த நிலையில் திடீரென மாயமானார்.
தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் தேடிய நிலையில், அருண்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் அவர் கடத்தப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்தது. தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்தவர்களும் அவரது ஆதரவாளர்களும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், அருண்குமாரை கண்டுபிடித்து தருவதாக கூறி சமாதானப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் தற்போது வரை அருண்குமார் எங்கே இருக்கிறார் என்று தெரிய வராததால் எடப்பாடி தொகுதியில் பரபரப்பான சூழ்நிலையும் நிலவி வருகிறது. ஒரு தரப்பினர் அருண்குமார் கடத்தப்பட்டு விட்டதாகவும், விலை போய்விட்டார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் அருண்குமாரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
