தொகுதி மறு வரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று மத்தியில் இருக்கும் அரசு தெளிவுபடுத்திவிட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் சத்திய நாராயணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 8) தியாகராய நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,” தமிழகத்தில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல் நடக்கும் காலத்தில் பாராளுமன்றத் தொகுதி மறு வரையறை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே, இப்போது தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி பேசுங்கள். நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை இந்தியா முழுவதும் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லை. ஏற்கனவே மத்தியில் இருக்கும் அரசு தெளிவுபடுத்திவிட்டது. இந்த நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று.அப்படியானால், மீண்டும் மீண்டும் அதையே பேசுகிறீர்கள் என்றால் வேறு பேசுவதற்கு வழியில்லை. நம் இயக்கத்தைப் பற்றி பேச எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் மத்தியில் இருக்கின்ற நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை பற்றி பேசுகிறார்.இப்போது நடப்பது சட்டமன்றத் தேர்தல் தானே. அதைப் பற்றி பேசுங்கள். நடக்காத நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி எதற்கு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? அதனால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார்.
திமுகவில் என்னைப் பார்த்து “அடிமை அடிமை” என்கிறார்கள். நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். நான் மட்டுமல்ல, எங்கள் தொண்டர்கள்கூட யாருக்கும் அடிமையும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களுடைய அரசியல் பள்ளியில் படித்த மாணவர்கள் நாங்கள். யாருக்கும் அஞ்ச மாட்டோம்.இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்தத் திட்டமாக இருந்தாலும் ஆதரிப்போம், வரவேற்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை யார் கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து முறியடிப்போம். இதுதான் எங்கள் கொள்கை. உங்களைப் போல ஆட்சி அதிகாரத்திற்காக எதையும் அடமானம் வைக்க மாட்டோம். அடமானம் வைக்கும் கட்சி திமுக என்றார்.
திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின் 20 நாட்கள் கழித்துதான் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்தீர்கள். அதிமுக அப்படியில்லை. அதிமுக கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்தோம். எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்கள். இரண்டு மணி நேரத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவு பெற்றது. அதிமுக, பாஜக, பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு 2 மணி நேரத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. யாரும் அடிமை இல்லை. அடுத்த நாளே தேர்தல் அறிக்கையை வேகமாக அறிவித்தோம். பத்து நாட்கள் கழித்து நாங்கள் வெளியிடவில்லை.
அதற்கு அடுத்த நாள் முதல் வேட்பாளர் பட்டியலை தமிழகத்தில் முதல் முறையாக அதிமுக வெளியிட்டது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் இரண்டாவது பட்டியல், அடுத்து மூன்றாவது பட்டியல் என வரிசையாக வெளியிடப்பட்டது.
10 நாட்கள் கழித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின், “திமுகவை அதிமுக காப்பியடித்துவிட்டது” என்று பேசுகிறார். யார் முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது? பத்து நாட்களுக்கு முன்பே தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதிமுகவைப் பார்த்துதானே திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது என்று தெரிவித்தார்.ஏற்கனவே 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 525 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் நான்கில் ஒரு பங்கு அறிவிப்புகளைக்கூட நிறைவேற்றவில்லை. அதனால் அவர்களால் தைரியமாகத் தேர்தல் அறிக்கையை வெளியிட முடியவில்லை” என்று விமர்சித்தார்.
