அதிமுக ஆட்சிக்கு வந்தால்… : ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டை ஸ்டாலின் தலைகுணிய வைத்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்துகொண்டிருக்கும் நிலையில் திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது.

ADVERTISEMENT

இதை குறிப்பிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் கலைஞரை தற்போதைய முதல்வர் வீட்டு சிறையில் வைத்திருந்தார் என்று கூறியிருந்தார்.

இதற்கு நெல்லை பிரச்சாரத்தில் பதிலடி கொடுத்த முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், கலைஞரை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. கலைஞர் ஒரு சிங்கம் அவரை யாரும் வீட்டு சிறையில் வைக்கமுடியாது என்று பதிலடி கொடுத்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 4) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “நான் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதாக ஸ்டாலின் கூறுகிறார். உங்களுடைய கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள். உங்கள் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவிடம் காட்டுங்கள். அந்த ஆடியோ செய்தியைத்தான் நான் சொன்னேன். என் மீது கோபத்தை காட்டுவதால் எந்த வித பிரயோஜனமும் இல்லை.

ADVERTISEMENT

அப்பாவையே சிறையில் வைத்திருப்பதெல்லாம் நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “2021 தேர்தலின் போது திமுகவின் 22ஆவது வாக்குறுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது முன்னாள் முதல்வர் கலைஞர் வீட்டு சிறையில் வைத்தவர்கள் மீது, சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கையை அதிமுக அரசு எடுக்கும்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில், ஊழல் செய்வதில், பாலியல் வழக்கில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஸ்டாலின் வேறு என்ன சாதனை செய்தார். தமிழ்நாட்டை தலைகுனிய வைத்துவிட்டார். வெறும் போட்டோ ஷூட், வெற்று விளம்பரதான். கடுகு அளவு கூட சாதனை இல்லை.. மலை அளவு சோதனைதான் உள்ளது” என்று விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share