அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தேர்தல் ஆணையம்.. எடப்பாடிக்கு எதிர்பாராத ட்விஸ்ட்!

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

கடந்த 6ம் தேதி வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், பல்வேறு அரசு அதிகாரிகள் ஆளும் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட 6 அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார்.

ADVERTISEMENT

அதேபோல் அதிமுக தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் சில அதிகாரிகளை மாற்றக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

முன்னதாக அதிமுக தரப்பில் அதிகாரிகளை மாற்றுவதில் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிகள் குறித்து ‘மின்னம்பலத்தில் “டிஜிட்டல் திண்ணை: ‘கெத்தா’ வலை விரித்த இபிஎஸ்.. ‘கொத்தா’ நழுவிய ஐஏஎஸ் அதிகாரிகள்.. து.மு.க. கனவில் மிதக்கும் பாஜக ‘தலை’கள்.. அண்ணாமலையின் புது ‘அசால்ட்’ ரூட்!” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

நாம் சொன்னதைப் போலவே அதிகாரிகள் மாற்றப்பட்டாலும், எடப்பாடி நினைத்ததைத் தேர்தல் ஆணையம் முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எடப்பாடி எழுதிய கடிதத்தில், தமிழக உள்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் ஐஏஎஸ்-ஐ மாற்றிவிட்டு தர்மேந்திர பிரதாப் யாதவை நியமிக்கலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால் தேர்தல் ஆணையம் மணிவாசனை இன்று உள்துறை செயலாளராக நியமித்துள்ளது.

அதேபோல், சென்னை போலீஸ் கமிஷ்னராக அருணை மாற்றி தினகரனை நியமிக்கக் கோரியிருந்தார். சென்னை கமிஷ்னரை மாற்ற வேண்டும் என்ற எடப்பாடியின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம் அபின் தினேஷ் மோதக் என்பவரை நியமித்துள்ளது.

இதேபோல் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார்.

தொடர்ச்சியாக அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் அதிருப்தி தெரிவித்த திமுக, இன்று லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியது.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய கடிதத்தில், “டாக்டர் சந்தீப் மிட்டல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஆதரவாளர். டாக்டர் மிட்டல் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன” என்பதற்கான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையம் மிட்டலை அப்பதவியில் இருந்து நீக்கவில்லை என்றால் சட்டத்திற்கு உட்பட்டுத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் நிர்பந்திக்கப்படுவோம் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திமுகவின் கடிதத்தைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் ஆணையம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி பதவியில் இருந்து சந்தீப் மிட்டலை விடுவித்துள்ளது. மீண்டும் டேவிட்சன் தேவாசீர்வாதம் அந்தப் பதவியில் தொடவார் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த வகையில், உயர் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை மாற்ற முயற்சித்த எடப்பாடியின் முயற்சி ஓரளவு நிறைவேறியிருந்தாலும், அவர் நினைத்த அதிகாரிகளை அந்தப் பதவிகளில் அமர்த்தும் முயற்சியில் அவர் பின்னடைவையே சந்தித்துள்ளார் என பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share