நா.மணி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்து, தேர்தல் ஆணையத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் இளம்பகவத்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக இருந்தபோதே மக்கள் பணியில் ஈடுபட்டு, “சிறந்த மக்கள் ஊழியன்” என்று, மக்களால் அடையாளம் காணப்பட்டவர். கொரோனா கால கட்டத்திற்குப் பிறகு, அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக “இல்லம் தேடி கல்வி” என்ற திட்டம் வடிவமைக்கப்பட்ட போது, அதன் பொறுப்பாளராக இருந்து சிறப்பாக செயல்படுத்தியவர்.
இந்தியாவின் தனித்துவமான இந்தத் திட்டத்திற்கு மெருகூட்டியவராக இருந்தார். பொது நூலகத் துறை இயக்குநராக இருந்த காலகட்டத்தில், தமிழ்நாடு அரசு, மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகளை முன்னெடுத்த போது, அதனையும், சென்னை புத்தகக் கண்காட்சி, பன்னாட்டு புத்தகக் கண்காட்சியையும் சிறப்பாக நடைமுறைப்படுத்த பாடுபட்டவர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய காலகட்டத்தில், சகல தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
இவர் பணியிலிருந்து மாற்றப்பட்டார் என்ற செய்தி அறிந்ததும், தூத்துக்குடி நகர அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும், மீனவ சமூக மாணவன் ஒருவன், ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவரைப் பார்க்க ஓடோடியிருக்கிறான். அவரைப் பார்க்க முடியாமல் திரும்பி வந்துவிட்டான். அந்தச் சம்பவமே இளம் பகவத் எப்படிப்பட்ட ஆட்சியராக இருந்திருக்கிறார் என்பதற்கு சான்று பகர்கிறது.

தேர்தல் நேர பணியிடை மாற்றம் எதற்காக?
இவரைத் திடீரென்று தேர்தல் ஆணையம் பணியிலிருந்து மாற்றி, வேறு மாவட்ட ஆட்சியரை நியமித்துள்ளது. இவரை மட்டுமல்ல; இவரைப் போன்ற பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் முதல், காவல் துறை இயக்குநர் வரை இப்பணியிட மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், இதை ஒரு வழக்கமான நடைமுறை என்று சொல்லி கடந்து போக முடியாது. ஏன் இப்படி திடீரென அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள்? “அவர்கள் அந்த இடத்தில் தொடர்ந்தால், அவர்களது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் தேர்தல் நியாயமாக, நேர்மையாக, சுதந்திரமாக நடக்காது” என்பதே இதன் பொருள்.
வெளிப்படையாகப் பார்த்தால், இது ஒரு குடிமைப்பணி அதிகாரி மீது வைக்கப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு. அதாவது, அவர்களின் நேர்மை மற்றும் நடுநிலைமை மீது தேர்தல் ஆணையம் சந்தேகம் கொள்கிறது என்பதற்கான அறிகுறி. அல்லது, அவர்கள்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டும் செயல்பாடு.
தேர்தல் ஆணைய அதிகாரங்கள் வரம்பற்றதா?

தேர்தல் நடத்தும் முறை மீது, சந்தேகத்தின் நிழல் கூட படக்கூடாது. அப்போதுதான் குடிமக்கள் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொள்ள முடியும். தேர்தல் ஆணையம், தனக்கு அளித்திருக்கும் அதிகாரத்தை, அரசியல் சாசனம் கூறியுள்ள பணியை ஆத்மார்த்தமாக செய்கிறது என்ற நம்பிக்கை வைக்க முடியும். தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறது என்ற உணர்வு மக்களிடம் உருவாகும். அதோடு, வெளிப்படைத்தன்மையோடு தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற உறுதித்தன்மை வலுப்படும்.
இதற்காகவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 324வது பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அதிகாரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. இந்தச் சட்டப் பிரிவின் அடிப்படையில்தான், தலைமைச் செயலர் முதல் உயர்ந்த அதிகாரிகள் வரை, பணியிடை மாற்றம் செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது.
தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது வரம்பற்ற அதிகாரம் அல்ல. முறைப்படுத்தப்படாத அதிகாரம் அல்ல. தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களும் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டவை என்பதைக் உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்?
193 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை தேர்தல் அதிகாரி மீது சமர்ப்பித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நோட்டீஸை இரு அவைகளின் தலைவர்களும் நிராகரித்திருக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கை இல்லை என்று கையெழுத்து இட்டு கொடுத்திருப்பது கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டியது. இந்த பின்னணியில் இருந்துதான் தேர்தல் ஆணையம் தனது பணிகளை முன்னெடுத்து செல்லவேண்டும்.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்/ சந்தேகங்களின் சாரத்தை விளக்க வேண்டும்
“இந்த அதிகாரி இருந்தால் சுதந்திரமான தேர்தல் நடைபெறாது” என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் இந்த மாற்றங்கள் நடைபெறுகின்றன.
அப்படியானால், அதன் மீது மக்களுக்கு எழும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம்:
எந்த அடிப்படையில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன?
அந்த அதிகாரிகள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் என்ன?
அவற்றிற்கான ஆதாரங்கள் என்ன?
அவர்கள் ஏதேனும் அரசியல் சார்புடன் செயல்பட்டதாக குற்றச்சாட்டு இருந்தால், அதன் விவரம் என்ன?
இத்தகைய தகவல்கள் வெளிப்படையாக வெளியிடப்பட்டால் மட்டுமே, இந்த நடவடிக்கைகள் நியாயமானவை என்று மக்கள் நம்புவார்கள்.
தேர்தல் ஆணைய அதிகாரங்கள் நியாயமாக அமலாக்கம் பெற வேண்டும்

அரசியலமைப்பு சட்டத்தின் 324வது பிரிவு தேர்தல் நடத்த அதிகாரம் அளிப்பதுபோலவே, பிரிவு 14, 19(1) மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவை வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
தேர்தல் ஆணையம் பரந்த அதிகாரங்களை வைத்திருக்கலாம். ஆனால், அந்த அதிகாரங்கள் காரணப்பூர்வமாகவும், நியாயமான முறையிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், தலைமைச் செயலாளர், டிஜிபி என அதிகாரிகள் மாற்றப்படும்போது, தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தின் மீது சந்தேக நிழல் விழக்கூடாது.
தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது அதிகாரம் அல்ல பொறுப்பு
தேர்தல் நேரத்தில் அதன் நடவடிக்கைகள் சட்டப்படி சரியா என்பது ஒரு புறம். மறுபுறம், அது நியாயமானதா என்ற மக்களின் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும். அந்தப் பதில் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான செயல்பாட்டில்தான் இருக்கிறது.
தேர்தல் ஆணையம் ஒரு “பெரும் அதிகார மையம்” அல்ல. அது ஒரு “பொறுப்பு”. அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்ட ரீதியாக மட்டுமல்லாமல், நெறிமுறையுடனும் நியாயத்துடனும் அமைய வேண்டும்.
இதுவரை மேற்கொண்ட இடமாற்றங்களுக்கு காரணமான அம்சங்களை தேர்தல் ஆணையம் மக்கள் மத்தியில் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும். அதுவே, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தும் வழி.
கட்டுரையாளர் குறிப்பு

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
