தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் பிரதான கூட்டணி கட்சியாக உள்ள காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 28) நடைபெறுகிறது.
திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான ஏழு பேர் கொண்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்தை குழு பங்கேற்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர், குறிப்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர், ஆட்சியில் பங்கு கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், இன்றைய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது.
முன்னதாக, 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை வழங்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதை சுட்டிக்காட்டி, கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட 25 தொகுதிகளையே வழங்க முடியும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மாநிலங்களவை இடம் வழங்குவதற்கும் திமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் வரும் மார்ச் 2ஆம் தேதிக்குள் தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்ய வேண்டும் காங்கிரஸ் கட்சியை திமுக தரப்பு வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 7 கட்சிகளுடன் இன்று மட்டும் திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
