மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சீட் கொடுக்காததால் அதிருப்தியில் இருந்த நிர்வாகி அந்த கட்சியில் இருந்து விலகி பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுக வேட்பாளருக்கு எதிராக இன்று (ஏப்ரல் 4) சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
திமுகவின் கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2400 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை இழந்த அவர் இந்த முறை அதனை சரிசெய்யும் வகையில் தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அவர் திமுகவில் தனக்கு தான் சீட் என நினைத்து கொண்டு இருந்த நிலையில் கட்சி தலைமை இவருக்கு சீட் வழங்காமல் காரமடை வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி கல்யாண சுந்தரம் அவர்களின் மனைவி கவிதா கல்யாண சுந்தரத்துக்கு சீட் வழங்கியது.
இதனால் அதிருப்தி அடைந்த அவர் அது குறித்து தலைமையிடம் முறையிட்டும் சீட் வழங்கப்படாததால் இன்று (ஏப்ரல் 4) தனது கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டு சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்
இன்று தனது ஆதரவாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் வந்த டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
