’ஆரண்யகாண்டம்’ படத்தில் ‘ப்பே’ என்று நாக்கைக் காட்டுகிற காட்சியில் தனது நடிப்பால் நம்மை மிரட்டியவர் ஜாக்கி ஷெராஃப். இவரது மகன் டைகர் ஷெராஃப் தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராகத் திகழ்கிறார். சுமார் பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகமான இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை கிடைக்கச் செய்த படம் ‘பாஹி’.
ரொமான்ஸ், ஆக்ஷன், த்ரில்லர் வகைமையில் அமைந்த இந்தப் படமானது பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால் இதன் இரண்டாம், மூன்றாம் பாகங்களும் வெளியாகின. அப்படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றன.
இடையே ‘வார்’ தவிர டைகர் ஷெராஃபின் வேறு படங்கள் ஏதும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில், அந்தக் குறையைப் போக்கும்விதமாக ‘பாஹி 4’ வெளியாகவிருக்கிறது.
கன்னடப் படவுலகைச் சேர்ந்த இயக்குனர் ஏ.ஹர்ஷா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘கப்பல்’ பட நாயகி சோனம் பஜ்வா உடன் இன்னொரு நாயகியாக ஹர்னாஸ் சந்து நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் தல்பாதே, உபேந்திர லிமாயே, சௌரஃப் சச்தேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் கொடூர வில்லனாக இடம்பிடித்துள்ளார் சஞ்சய் தத்.
இந்தப் படம் ‘பூ’ சசி இயக்கிய ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. பரத் இந்தப் படத்தில் நடித்தபோது தான் ‘சிக்ஸ் பேக்’ வைத்தார் என்பது தெரிந்த விஷயம். இதில் சுதேஷ் பெர்ரி எனும் இந்தி சீரியல் நடிகர் வில்லனாக தோன்றியிருந்தார். அவரது இடத்தைத் தான் இப்படத்தில் சஞ்சய் தத் நிரப்ப இருக்கிறார்.
இதற்கு முன் வந்த ‘பாஹி’ சீரிஸ் படங்களில் சண்டைக்காட்சிகள் கொஞ்சம் கோரம் நிறைந்தவையாக இருக்கும். அந்த காலகட்டத்தில் வெளியான சில தமிழ், தெலுங்கு, இந்திப் படங்கள் அப்படித்தான் இருந்தன என்பதே அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது.
தற்போது ‘கில்’, ‘மார்கோ’ போன்ற திரைப்படங்கள் அந்த வன்முறைச் சித்தரிப்பில் அடுத்த உயரத்தை எட்டின.
’அதெல்லாம் என்ன பம்மாத்து, அதையெல்லாம் விடப் பெருசா கேள்விப்பட்டிருக்கியா’ என்று ‘நேரம்’ பட நாசர் ‘மீம் டெம்ப்ளேட்’ போன்று ‘பாஹி 4’ படத்தின் ட்ரெய்லர் அமைந்திருக்கிறது. அந்த வன்முறைக் காட்சிகளில் சில ‘பழைய ஹாலிவுட் படங்கள்’ சிலவற்றில் இருந்து சுட்டவை என்றாலும், அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் தியேட்டரில் ‘உவ்வேக்’ என்று சிலரைச் சொல்ல வைக்கும் வகையில் இருப்பதை மறுக்க முடியாது.
‘உன்னை விட நான் பெருசு’ என்று மார்தட்டிக் கொள்கிற வகையில் சில பான் இந்தியா படங்கள் வன்முறை சித்தரிப்பைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில், ‘பாஹி 4’ அதில் சிகரம் எட்டியுள்ளது என்றே சொல்லலாம். இப்படத்தில் நிறைந்துள்ள வன்முறைக்காகவே, இது ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருக்கிறது.
இந்த வன்முறைக் காட்சிகளைப் பார்க்கிற சில ரசிகர்கள் தியேட்டரில் ‘கூஸ்பம்ஸ்’ ஆவார்கள். கேட்டால், ’இதுதான் ட்ரெண்ட்’ என்பார்கள். அந்த கொடூரத்தைத் தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை..?!