டிஜிட்டல் திண்ணை: விஜய்- வைகோ திடீர் சந்திப்பு- மீண்டும் ‘ராஜ்யசபா எம்பி’? நம்பிக்கையில் மதிமுக!

Published On:

| By Minnambalam Desk

Digital Thinnai: Vijay-Vaiko Meeting- Rajya Sabha Seat Hopes Rise

வைஃபை ஆன் செய்ததும், “காற்றடிக்கும் திசைக்கு தலை வணங்கும் நாணல்களே.. நான் அஃதில்லையே” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. ரொம்ப கவித்துமான வரிகளை பாடுறீங்க..

கவித்துவம், கதாகலாட்சேபம் எல்லாம் ஜென்ஸிக்கு எதுக்கு? காத்துவாக்குல வர்றதுதானே.. விஷயத்துக்கு போயிடுவோம் ப்ரோ…

ADVERTISEMENT

தலைமைச் செயலகம் போய் சிஎம் விஜய்யை (Vijay) வைகோ (Vaiko) நேத்து சந்திச்சு பேசினார்..

அதுக்கு பிறகு பிரஸ்மீட்ல, ”ஸ்டெர்லைட் ஆலையை வேறு பெயரில் திறக்க முயற்சிக்கிறாங்க.. அனுமதிக்க கூடாதுன்னு சிஎம் கிட்ட வலியுறுத்தி இருக்கிறேன்.. டெல்லியில ஆகஸ்ட் 4-ந் தேதி நடக்கும் என்னோட நாடாளுமன்ற உரைகள் புக் வெளியீட்டு விழாவில புத்தகத்தை பெறுவதற்கு சிஎம் விஜய்கிட்ட டைம் கேட்டேன்.. ஓகே சொல்லி இருக்கிறார்.. இனிமேல்தான் துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்கிட்ட அனுமதி கேட்கனும்..”னு வைகோ சொன்னார்..

ADVERTISEMENT

திமுக கூட்டணியில இருந்து மதிமுக வெளியேறுவது உறுதியாகி இருக்கு; ஜூன் 27-ந் தேதி மதிமுக பொதுக்குழுவில இதை பத்தி அறிவிக்கப் போறாங்கன்னு சொல்லப்படுற நிலையில திடீர்னு வைகோ, தலைமைச் செயலகம் போய் சிஎம் விஜய்யை சந்திச்சு பேசியிருக்கிறார்..

இந்த சந்திப்பை பத்தி வைகோவுக்கு நெருக்கமானவங்ககிட்ட நாம விசாரிச்சப்ப, “சிஎம் விஜய்யை சந்திக்கனும்னு வைகோ அப்பாயிண்மென்ட் கேட்டிருந்தாரு.. இதுக்கு அப்புறமா வைகோ வீட்டுக்கு மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனாவை விஜய் அனுப்பி வெச்சார்..

ADVERTISEMENT

அப்ப வைகோகிட்ட, “உங்கமேல ரொம்பவும் ப்ரியமா இருக்கிறார் சிஎம் சார்.. உங்களோட பேச்சை எல்லாம் சிஎம் ரொம்பவே ஆர்வமா கேட்டிருக்காரு.. உங்க மேல அளவு கடந்த மரியாதை வெச்சிருக்கிறார்.. உங்களை ‘நல்லா கொண்டு வரனும்’.. ’அண்ணனை நல்லபடியா வெச்சுக்கனும்’னு சிஎம் சார் சொல்வாரு”ன்னு மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனா நெகிழ்ச்சியாக சொன்னார்..

இந்த சந்திப்புக்கு அடுத்துதான் நேத்து தலைமை செயலகத்துல சிஎம் விஜய்யை வைகோ சந்திச்சார்.. சிஎம் விஜய்கிட்ட 45 நிமிஷம் வைகோ பேசினார்.. இந்த சந்திப்பில, “அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அப்புறம் பதவி பிரமாணத்தை பார்க்காமலே வாசிச்ச இருக்கீங்க.. ஆனா ஒபாமா கூட தான், பிரமாண பத்திரத்தை வாசிக்கும் போது ரெண்டு வார்த்தைகளை விட்டுட்டாரு.. அதனால சுப்ரீம் கோர்ட், ஒபாமாவோட பதவி பிரமாணம் செல்லாதுன்னு சொல்லிடுச்சு.. அதுக்கு அப்புறம் ஒபாமா மறுபடியும் பதவி பிரமாணம் எடுத்தாரு.. ஆனா நீங்க அச்சரம் பிசகாம அழுத்தம் திருத்தமா ரொம்பவே தன்னம்பிக்கையா உச்சரிச்சு பதவி பிரமாணம் எடுத்துகிட்டீங்க.. என்னோட பாராட்டுகள்”னு விஜய்கிட்ட வைகோ சொன்னார்.

அப்படியே பேசும் போது திமுகவை பற்றி, கலைஞருக்கும் தமக்குமான உறவு பற்றி, கலைஞர்- ஸ்டாலின் – உதயநிதியின் பாலிட்டிக்ஸ் மூவ்ஸ் பத்தி நிறையவே விஜய்கிட்ட வைகோ ஷேர் செஞ்சாரு..

ஸ்டெர்லைட் ஆலையை பத்தி பேசும் போது, வேதாந்தா ஓனர் அனில் அகர்வால் எப்படி எல்லாம் அனுமதி வாங்கினாரு.. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கேஸ் நடத்தினப்ப தன்கிட்ட எப்படி எல்லாம் பேசி பார்த்தாருங்கிற விவரங்களையும் சொல்லி ஸ்டெர்லைட்டோட அபாயத்தை பத்தியும் விவரிச்சார் வைகோ.. எல்லாத்தையும் பொறுமையாக கேட்டுகிட்ட சிஎம் அவர் சைடுல இருந்து பெரிசா எந்த கருத்தும் சொல்லலை”ன்னு சொல்றாங்க ப்ரோ..

திமுக கூட்டணியில இருந்து மதிமுக விலகுறது, ஆதவ் அர்ஜூனா- சிஎம் விஜய் கூட வைகோவின் அடுத்தடுத்த சந்திப்புகள்னு நடக்கிற ‘சம்பவங்களால்’ வைகோவுக்கு விஜய் ”ராஜ்யசபா எம்பி பதவி” கொடுத்துடுவாருன்னு நினைக்கிறோம்னு மதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் ரொம்பவே நம்பிக்கையா பேசுறாங்க ப்ரோ…

அதே மாதிரி மதிமுகவோட 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய போறாங்களா?ன்னு வைகோ கிட்ட நேத்து தலைமை செயலகத்துல ரிப்போர்ட்டஸ் கேட்டாங்க.. அதுக்கு, “யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.. மனசுல தோன்றுவதை எல்லாம் சொல்ல முடியாது”ன்னு வைகோ சொன்னார்..

இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “மதிமுகவோட 2 எம்.எல்.ஏ.க்கள்… சீர்காழி செந்தில் செல்வன், கடையநல்லூர் திமு ராஜேந்திரன்.. இவங்க உதயசூரியன் சின்னத்துல நின்னு ஜெயிச்சவங்க.. அப்படி இவங்களை ராஜினாமா செய்யுங்கன்னு வைகோ சொன்னாலும் கடையநல்லூர் எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன், ராஜினாமா செய்யமாட்டாருன்னு வைகோவுக்கு தகவல் கிடைச்சுருக்கு.. அதனால ”பிரச்சனை எதுக்கு? அப்படி எல்லாம் ராஜினாமா செய்ய சொல்லாமலே விட்டுடுவோம்”னு வைகோ நினைக்கிறாரு”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share