ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ஆளுநரை எதிர்க்கத் தயக்கம்: ஸ்டாலின் ஸ்கெட்ச்சில் சிக்கிய எடப்பாடி

Published On:

| By Aara

digital thinnai stalin put a sketch to edappadi

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாசலில் உள்ள மெயின் கேட்டு முன்பு இன்று (அக்டோபர் 25) பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகல் சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையின் வாசலில் இருக்கும் முதல் கேட்டில் ரவுடி கருக்கா வினோத் என்பவர், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டை வீசினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தமிழ்நாடு அரசியலில் சட்டம் ஒழுங்கு பற்றிய விவாதங்களை மீண்டும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது என்று ஆளுநர் மாளிகையும் அதிகாரபூர்வ செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த பெட்ரோல் குண்டு ஏற்படுத்திய அதிர்வுகளுக்கு இணையாக அக்டோபர் 23ஆம் தேதி ஆளுநர் பேசிய பேச்சும் தமிழ்நாடு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அன்று திருச்சியில் மருது சகோதரர்கள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, ’தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் உரிய முறையில் மதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் சாதி தலைவர்களாக சுருக்கப்பட்டு விட்டார்கள். இதற்கு ஆட்சியாளர்கள் தான் காரணம். தமிழ்நாட்டில் ஆரியம்- திராவிடம் என்ற பேதத்துக்கு இடமில்லை, இதெல்லாம் ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய பிரிவினை.  கால்டுவெல் என்கிற பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர் தான் இது போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கினார்’ என்ற ரீதியில் ஆளுநர் பேசிய பேச்சு கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் இதுகுறித்து கண்டனம் தெரிவித்தார். திமுகவின் பொருளாளர் டி. ஆர். பாலு கண்டன அறிக்கை வெளியிட்டார். திமுகவின் கூட்டணி கட்சிகள் எல்லாம் கண்டனம் தெரிவித்தன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விஷயத்தில் ஆளுநர் கூறியது சரிதான் என்று கருத்து தெரிவித்தார்.

அதே நேரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆரியம்- திராவிடம் பற்றி ஆளுநர் பேசிய பேச்சு குறித்து கருத்தை கேட்டபோது, ’இதெல்லாம் புராணம் படித்தவர்களுக்கு தான் தெரியும். அறிஞர்களிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு இது பற்றி தெரியாது’ என்று சொல்லி நழுவி விட்டார். ஆளுநரின் கருத்துக்கு நேரடியாக எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்ற கேள்விகள் அதிமுக சீனியர்களுக்குள்ளேயே எழுந்திருக்கின்றன.

இதன் பின்னணி குறித்து அதிமுக- பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது வேறு ஒரு தகவல் கிடைக்கிறது. அதாவது, ’ கூட்டணி முறிந்து கடந்த ஒரு மாதம் ஆகியும் கூட இதுவரை அதிமுகவை பற்றி பாஜக கடுமையாக விமர்சிக்கவில்லை. பாஜகவை பற்றி அதிமுகவும் கடுமையாக விமர்சனம் செய்யவில்லை. இந்த அடக்கி வாசித்தலுக்கு பின்னால் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது.

அதாவது 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்தால் மீண்டும் அதிமுகவோடு பேசி கூட்டணி உருவாக்க டெல்லி தலைமை தீவிர முயற்சி எடுக்கும். அப்படி ஒரு வேளை, முடியவில்லை என்றால் தமிழ்நாட்டில் அதிமுகவோடு கூட்டணி இருந்த நேரத்தில் பாஜக 9 தொகுதிகளை குறி வைத்து வேலை செய்து வந்தது. அந்த 9 தொகுதிகளிலும் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது அல்லது பலவீனமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தம் அதிமுகவோடு போடப்படும். இந்த புரிந்துணர்வின் அடிப்படையில் தான் பாஜகவை அதிமுகவும் அதிமுகவை பாஜகவும் விமர்சிப்பதே இல்லை’ என்கிறார்கள். ஆளுநர் கருத்துக்கு எடப்பாடி கண்டனம் தெரிவிக்காததற்கு பின்னால் இருக்கும் உண்மை இதுதான் என்கிறார்கள்.

ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம் என திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் சித்தாந்த அடிப்படையிலான விஷயத்தில் கூட ஆளுநருக்கு எடப்பாடி எதிர்ப்பு தெரிவிக்காததன் மூலம் ஸ்டாலின் போட்டு வரும் ஸ்கெட்சில் எடப்பாடி சிக்கிவிட்டார் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரங்களில்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு தேதி அறிவிப்பு!

விஷமிகளால் பெட்ரோல் வெடி குண்டு தாக்குதல்: ஆளுநர் மாளிகை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share