வைஃபை ஆன் செய்ததும், ”நல்லதை நினைப்போம், நல்லதைச் சொல்வோம், நல்லதே நடக்கும்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. ஏதோ அதிமுக்கியமான தகவல் போல?
ஏதோ தோணுச்சு.. அவ்வளவுதான்.. சரி.. திமுக, காங்கிரஸ் கட்சிகளோட அடுத்தடுத்த மூவ் பரபரப்பா இருக்கு…
முதல்ல சுப நிகழ்ச்சி ஒன்னை சொல்றேன்.. செல்வப்பெருந்தகை மகளோட திருமண நிச்சயதார்த்தம் இன்னைக்கு.. சிஎம் ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட பலரும் இதுல கலந்துக்க இருக்காங்க..
சரி.. காங்கிரஸ் மூவ் என்னவாம்?
சொல்றேன்.. ”திமுக 25 சீட் கொடுக்குது.. ஏத்துக்கலாமா வேணாமா?”ன்னு தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்கிட்ட கே.சி. வேணுகோபால் பேசியிருந்தாருன்னு நேத்து பதிவு செஞ்சிருந்தோம் இல்லையா?
அதுக்குப் பிறகு செல்வப்பெருந்தகையிடமும் கே.சி. வேணுகோபால் போனில் பேசியிருந்தார்.
அப்போ, “விஜய் தவெகவுடன் நாம கூட்டணி அமைச்சா எப்படி இருக்கும்?”னு கேசி வேணுகோபால் கேட்டார்..
அதுக்கு, “தற்கொலை முயற்சி”ன்னு செல்வப்பெருந்தகை டக்குன்னு பதில் சொன்னார்..
சட்டென கோபப்பட்ட கேசி வேணுகோபால், “யாருக்கு தற்கொலை முயற்சின்னு சொல்றீங்க? திமுகவுக்கா?”ன்னு திருப்பி கேட்டார்
செல்வப்பெருந்தகையோ, “இல்லை… விஜய் கூட கூட்டணி வெச்சா நமக்குதான் அது தற்கொலை முடிவு.. அப்படி நீங்க கூட்டணி வைக்கிறதுன்னு முடிவு செஞ்சுட்டீங்கன்னா நான் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்யறேன்”ன்னு சொல்லி இருக்கார்…
உடனே போனை கட் செஞ்ச கே.சி.வேணுகோபால், கார்கே லைனுக்குப் போனார்.. கார்கேவிடம், “விஜய் கூட கூட்டணி வைச்சா நான் ராஜினாமா செய்யறேன்னு செல்வப்பெருந்தகை சொல்றாரே?”ன்னு தகவலை பாஸ் செஞ்சிருக்கார்..
கார்கே, செல்வப்பெருந்தகை லைனுக்கு வந்து, “நீங்க ஏன் ராஜினாமா செய்யனும்.. பொறுங்க.. நாம திமுக கூட்டணியிலேயே இருப்போம்… நான் ராகுல் காந்திகிட்ட பேசறேன்.. ”ன்னு அமைதிப்படுத்தி இருக்கிறார்..
இப்ப கார்கே பெங்களூரு வந்திருக்கிறார்.. ராகுல் காந்திகிட்ட கார்கே மறுபடியும் பேசினாரு..
இதுக்கு அப்புறமாக, சென்னையில இருக்கிற ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி தொடர்பு கொண்டு பேசி, ஸ்டாலினை சந்திச்சு பேசுங்கன்னு சொல்லி இருக்கிறார்..
ப.சிதம்பரமும் ஸ்டாலினை எந்த நிமிஷத்திலும் சந்திச்சு பேசுவாரு
காங்கிரஸ் கட்சி 41 சீட்டுல ஆரம்பிச்சது.. அது அப்படியே 39, 36-ன்னு வந்துச்சு..
இப்ப ஸ்டாலினை சந்திக்கும் ப.சிதம்பரம் 35 தொகுதிகளில் இருந்து ஆரம்பிக்க இருக்கிறாராம்..
25+1-ன்னு உறுதியா இருந்த ஸ்டாலின் இப்ப 30+1 வரைக்கும் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
