சென்னையில் 26, 27 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனா, சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வரும் அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் சென்னையில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 27ஆம் தேதி காலை புயலாக வலுவடையும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் சென்னையில் மழை பாதிப்பை தடுக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கிடையே சென்னையில் நடந்த ஆய்வு பணிகள் தொடர்பான கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ அங்கெல்லாம் தண்ணீரை அகற்ற மோட்டார்கள் டிராக்டர்கள் தயாராக உள்ளன.
சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தயார். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
