வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் அடையாறு முகத்துவார பகுதியில் நடந்து வரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 24) ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது.
சென்னையிலும் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
வேளச்சேரி, கிண்டி, மேடவாக்கம் என பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில் அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவுவதால் கடலோர மாவட்டங்கள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் அடையாறு முகத்துவார பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார்.
அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வு பணியின் போது முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
