சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. csk lost to rcb by 2 runs and ayush matre 94 goes vein
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (மே 3) இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.

ஆயுஷ் மத்ரே, ஜடேஜா வாணவேடிக்கை!
தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேக் ரஷீத் (17 ரன்கள்) விரைவாகவே ஆட்டமிழந்தார். அடுத்ததாக சாம்கரனும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
எனினும் 3வது விக்கெட்டுக்கு ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்தார் ஜடேஜா. சின்னசாமி மைதானத்தில் வாணவேடிக்கை காட்டிய இருவரும் வேகமாக அரைசதம் கடந்தனர்.
ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ஆயுஷ் மத்ரே 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக வந்த ப்ரெவிஸும் டக் அவுட் ஆக ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கண்டது.

திக் திக் கடைசி ஓவர்!
அப்போது ஜடேஜாவுடன் தோனி ஜோடி சேர, கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் சென்னைக்கு வெற்றி என்ற நிலை இருந்தது.
முதல் இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் கிடைக்க மூன்றாவது பந்தில் தோனி எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
இதனால் கடைசி 3 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் யஷ் தயாள் வீசிய நோபாலில் சிக்ஸ் பறக்க விட்டார் துபே. ப்ரீ ஹிட்டாக கிடைத்த அடுத்த பந்தில் சிங்கிள், 5வது பந்தில் 1 ரன்னும் கிடைத்தது.
கடைசி 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதில் ஒரு ரன் மட்டுமே சென்னை அணி எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே குவித்தது.
அதே நேரம் சொந்த மைதானத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.