கருத்துகளை அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திராணி இல்லாதவர் எடப்பாடி – ஸ்டாலின் குறித்த விமர்சனத்திற்கு CPI கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

கலைஞரை கடைசி காலத்தில் மு.க.ஸ்டாலின் வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் என பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் , ” அதிமுக பொதுச் செயலாளரும் ,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு, தேர்தல் தோல்வி பயம் தொற்றிக் கொண்டு விட்டது. விரக்தியின் உச்சக்கட்டத்திற்கு சென்று விட்டார்.

ADVERTISEMENT

பாஜக வின் மிரட்டல் உருட்டல்களுக்கு அடிபணிந்து சந்தர்ப்பவாதக் கூட்டணியை பாஜக வோடு உருவாக்கினார்.

மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை, மத்திய உளவுத்துறை (சி.பி.ஐ), மற்றும் வருமானவரித்துறை மூலம் கொடுத்த அழுத்தத்தால், அஇஅதிமுக வை ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பலிக்கடா ஆக்கிவிட்டார்.

ADVERTISEMENT

எதிர்காலத்தில் அஇஅதிமுக என்ற கட்சியே இருக்குமா? என்ற நிலையை எடப்பாடி உருவாக்கிவிட்டார்.

இந்த அவலத்திலிருந்து, உண்மையான அஇஅதிமுக தொண்டர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அவதூறாகப் பேசிவருகிறார்.

ADVERTISEMENT

முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் அவரது வீட்டிலும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். கலைஞரின் மகனான முதல்-அமைச்சர் ஸ்டாலின் உட்பட ,குடும்பத்தினர் அனைவரும் கலைஞரை அன்போடும்,கனிவோடும், அக்கறையோடும் கவனித்து வந்தனர் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

இந்நிலையில், கலைஞரை கடைசி காலத்தில் மு.க.ஸ்டாலின் வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் என எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசியதை கேட்டு தமிழக மக்களே கடும் எரிச்சலடைந்துள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைக்கும் அரசியல் கருத்துகளை அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறமையும்,திராணியும், ஜனநாயகப் பண்பும் இல்லாமல், கீழ்த்தரமான அவதூறுகளை பரப்புவது எதிர்கட்சித் தலைவர் பொறுப்பை வகிக்கும், முன்னாள் முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு அழகல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது.

கீழ்த்தரமான, அநாகரீகமான அரசியல் செய்வதை கைவிட்டு, ஆரோக்கியமான அரசியலில் ஈடுபடவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share