ADVERTISEMENT

“சாதி, மத அற்றவர் பார்த்திபன்” சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவு

Published On:

| By Pandeeswari Gurusamy

Parthiban

நடிகர் பார்த்திபனுக்கு ‘சாதி, மதமற்றவர்’ என்ற சான்றிதழை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் எனச் சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், தன்னை ஒரு குறிப்பிட்ட சாதி மற்றும் மொழியைச் சார்ந்தவராக அடையாளப்படுத்திக் கொண்டார். அவரது இந்தப் பேச்சுக்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, “நான் திட்டமிட்டு அப்படிப் பேசவில்லை; வாய் தவறி வந்த வார்த்தைகள்” என அவர் விளக்கம் அளித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பார்த்திபன் கடந்த 1958-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பிறந்த தனக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை. மேலும் பழைய எஸ்.எஸ்.எல்.சி (SSLC) படிப்பை முடித்த பின்னர் முறையான சான்றிதழ்களைப் பெறவில்லை. இதனால் தனது சாதி, மதத்தைத் தெரிவிக்கும் பிறப்புச் சான்றோ அல்லது கல்விச் சான்றோ தற்போது தன்னிடம் இல்லை.

சாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டி, ‘சாதி, மதமற்றவர்’ எனச் சான்றிதழ் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் பின்னர் சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த மார்ச் 25-ஆம் தேதி அவர் நேரில் ஆஜராகி உறுதிமொழிப் பத்திரம் வழங்கிய பின்னரும், தமிழகச் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி அதிகாரிகள் சான்றிதழ் வழங்கக் காலதாமதம் செய்தனர். இதையடுத்து பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அவருக்கு வரும் ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் உரிய சான்றிதழை வழங்க வேண்டும் என்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான தகவலை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்த சமூக விழிப்புணர்வு நல்மாற்றதை முன்னெடுக்கும் என் நல்லெண்ணத்தை வாழ்த்திப் பாராட்டும் அனைவருக்கும் நன்றி !
அரசின் வேலை வாய்ப்புகள் , அரசின் சலுகைகள் மூலம் சமுதாயத்திற்கு தேவையான நற்பலன்கள் பலருக்கும் கிடைப்பதனால் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். என் போன்ற சிலருக்கு அச்சலுகைகள் தேவைபடாமல் இருக்கலாம் . அப்படிப் பட்டவர்கள் இச்சலுகைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்வதனால்,
அச்சலுகைகள் தேவைபடுவோருக்கு இன்னும் கூடுதலாகக் கிடைக்க ஏதுவாகும் . எனவே தேவைப்படாதவர்கள் மட்டும் இந்த சாதி மதமற்றவர் சான்றிதழை பெற முன்வருகையில் என் முயற்சியின் மூலம் ஒரு G O (Government Order) pass ஆவது பெரியளவில் பயனளிக்கும். நல்லதை மட்டுமே வரவில் வைப்போம்,”என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share